

என் அப்பாவை கடைசியாகப் பார்க்க மனசு துடிக்குது. தமிழக முதல்வர் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று சசிபெருமாளின் 11 வயது மகள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த இடங்காணசாலை மேட்டுக்காட்டில் உள்ள காந்தியவாதி சசிபெருமாள் வீட்டின் அருகே அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்றுள்ள சசிபெருமாளின் மகள் கவியரசி(11) ‘தி இந்து’விடம் கூறியதாவது:
அப்பான்னா எனக்கு உயிரு... எப்போதாவதுதான் வீட்டுக்கு வருவார். வந்து இரண்டு, மூணு நாள்தான் சேந்தார்ப்பல இருப்பார். அப்போ என்ன ராணி மாதிரி வெச்சு பார்த்துக்குவார். நான் எது கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார். கடைசியா மடிக் கணினி கேட்டேன் உடனே வாங்கி கொடுத்தார்.
நான் அப்பாவோட இருந்ததைவிட அம்மாகூடதான் அதிக நாளு இருந்திருக்கேன். இப்போ எங்க அப்பா இல்லை என்றதும், அவரை பார்க்கணும்ணு மனசு தவிக்குது. அப்பா இறந்திட்டார் என நினைக்கும்போது அழுகை… அழுகையா வருது. அதவிட அவர பார்க்க முடியாம போயிடுமோன்ணு பயமா இருக்கு.
அம்மாவுக்கு கொஞ்சமா செலவுக்கு பணம் கொடுத்துட்டு போராட்டம்… போராட்டம் என ஊர் ஊரா என் அப்பா போவார். அப்பல்லாம் மறக்காம எனக்கும் செலவுக்கு பணம் கொடுப்பார். அப்பா கொடுத்த காசை சேர்த்து 200 ரூபா வெச்சிருக்கேன். சேமிச்சு வெச்ச காசை அப்பாகிட்ட காட்டணும்னு ஆசையா இருந்தேன்.
மது குடிக்க வேண்டாம் என பிரச்சாரம் போகும்போது பள்ளி விடுமுறை நாட்களில் என்னையும் கூட கூட்டிட்டு போவாரு. மது குடிக்க வேண்டாம்ணு துண்டுப் பிரசுரங்களை என் கையில கொடுத்து வீடு வீடா போடச் சொல்லுவாரு. நானும் அவர் கூட சேர்ந்து மது குடிக்காதீங்கன்னு கோஷம் போட்டுக்கிட்டே வீடு வீடா துண்டு பிரசுரங்களை கொடுத்திருக்கேன்.
வீட்டைவிட்டு வெளியே அப்பா போயிருக்கும்போது, காலையில 7 மணிக்கும், இரவு 8 மணிக்கு என் கூட மறக்காம போனில் பேசுவாரு. பத்திரமா உடம்ப பார்த்துக்கோமா, நல்லா படிக்கணும்ணு சொல்லுவாரு. இப்ப எங்க கூட அவரு இல்லை. அப்பாவை கடைசியாப் பார்க்கணும்ணு மனசு தவிக்குது. முதல்வர் அம்மா மதுவிலக்கு அமல்படுத்தி, எங்கேயோ தனியா இருக்க எங்கப்பா உடம்பை சீக்கிரம் வீட்டுக்கு எடுத்துட்டு வர நடவடிக்கை எடுக்கணும் என கண்ணீர் மல்க கவியரசி கூறினார்.