

‘‘தேர்தலை சந்திக்க மக்களை நம்பாமல் திமுக கார்பரேட் கம்பெனியை நம்புகிறது, ’’ என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை வடக்கு தொகுதியில் முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் விசாகன் முன்னிலை வகித்தார். பெண்களுக்கு மானிய விலையில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் கே ராஜு, வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர்வழங்கினர்.
மாவட்ட துணைச் செயலாளர் தங்கம், மாவட்ட பொருளாளர் ஜெ.ராஜா, எம்எஸ்.பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் செல்லூர் கே ராஜு பேசுகையில், ‘‘பெண் சமுதாயத்திற்கு வசந்த காலத்தை உருவாக்கி கொடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. உலகத்திலே பெண்களுக்கு தங்கம் வழங்கும் ஒரே அரசு, தமிழ்நாடு அரசு. ஜெயலலிதா, திருமணமாகும் பெண்களுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கினார்.இன்று அதை உயர்த்தி முதல்வர் கே.பழனிசாமி 8 கிராம் தங்கம் வழங்குகிறார். அதிமுகவினர் மக்களை நம்பி தேர்தல் களத்தை சந்திக்க போகிறோம். ஆனால் திமுகவோ மக்களை நம்பாமல் கார்ப்பரேட் கம்பெனியை நம்பி தேர்தலை சந்திக்கப் போகிறது, ’’ என்றார்.