என்எல்சி சுரங்கப் பகுதியில் மாஸ்டர் பட ஷூட்டிங்கிற்கு ஆதரவு எதிர்ப்பும்: தொடர்ந்து நடைபெறும் படப்பிடிப்பு

என்எல்சி சுரங்கப் பகுதியில் மாஸ்டர் பட ஷூட்டிங்கிற்கு ஆதரவு எதிர்ப்பும்: தொடர்ந்து நடைபெறும் படப்பிடிப்பு
Updated on
2 min read

நெய்வேலி என்எல்சி 2-ம் சுரங்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிக்கும் மாஸ்டர் திரைப்பட படபிடிப்பு கடந்த10 தினங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 5-ம் விஜய் நடித்தக் காட்சிகள் படமாக்கிக்கொண்டிருக்கும் போது, வருமான வரித் துறையினர் படபிடிப்பு தளத்திற்குச் சென்று, விசாரணைக்காக விஜயை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணை முடிந்து நேற்று மீண்டும் படபிடிப்பு தொடங்கியது. 2-ம் சுரங்கத்தினுள் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில், மாலை 2-ம் சுரங்க நுழை வாயிலில் திரண்ட பாஜகவினர்,நெய்வேலியில் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையப் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதி. அங்கு எப்படி ஷீட்டிங் நடத்த எப்படி அனுமதி வழங்கினீர்கள். பணம் கொடுத்தால் ஷூட்டிங் நடத்தலாம் என்றால், நாங்களும் பணம் செலுத்துகிறோம், எங்களையும் செல்பி எடுக்க அனுமதிக்கவேண்டும்.

மேலும் 2-ம் சுரங்கத்தினுள் மாரியம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோயிலுக்கு கிராம மக்கள் செல்ல அனுமதிக்கவேண்டும். திரைப்பட படபிடிப்புக்கு அனுமதி அளிக்கும் போது, கிராம மக்கள் வழிபட அனுமதிக்கவேண்டும் எனக் கூறி பாஜக மாவட்டத் தலைவர் சரவணசுந்தரம் தலைமையில் 30-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மந்தாரக்குப்பம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி வருகின்றனர்.

சுரங்கத்தினுள் படபிடிப்பு நடைபெறுவதால், படபிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாஜகவினர் எதிர்ப்பை அறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நெய்வேலி நகரச் செயலாளர் ஜோதிபாசு தலைமையில், அக்கட்சியினர் பாஜகவிற்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது சுரங்க நுழைவாயில் முன்பு திரண்டிருந்த விஜய் ரசிகர்களும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினருடன் இணைந்து பாஜகவிற்கு எதிராக கோஷமிட்டனர்

இதனிடையே படப்பிடிப்பிலிருந்த நடிகர் விஜய், படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேறி, சுரங்க நுழைவாயில் முன் திரண்டிருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்தார். பின்னர் அவரது காரில் சென்னை சென்றதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து நடைபெறும் படப்பிடிப்பு

பிப்ரவரி 3 முதல் 10-ம் தேதி வரை நெய்வேலி சுரங்கப் பகுதியில் படபிடிப்பு நடத்த அனுமதி பெற்றிருந்தது மாஸ்டர் படக்குழு. இந்நிலையில், தொடர் சர்ச்சைகளால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு படக்குழு வெளியேறியதாக தகவல் வெளியானது. ஆனால், படப்பிடிப்பு வரும் 10-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என படக்குழு தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (பிப்.8) காலை 6.30 மணியளவிலேயே நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து, அவர் சம்பந்தமான காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நெய்வேலி சுரங்கத்தினுள் இயங்கும் ராட்சத இயந்திரத்தின் மீது நடிகர் சரத்குமார்-விசித்ரா நடித்த அரவிந்தன் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. இது தவிர நடிகர் விசு இயக்கிய அவள் சுமங்கலிதான், இயக்குநர் சேரன் இயக்கி நடித்த சொல்ல மறந்த கதை, சமுத்திரக்கனி நடித்து இயக்கிய சாட்டை, அப்பா போன்ற திரைப்படங்கள் கடந்த காலங்களில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in