Last Updated : 07 Feb, 2020 06:08 PM

 

Published : 07 Feb 2020 06:08 PM
Last Updated : 07 Feb 2020 06:08 PM

என்எல்சி சுரங்கப் பகுதியில் விஜய்யின் ‘மாஸ்டர்’ ஷூட்டிங் நடத்த எதிர்ப்பு: பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி என்எல்சி 2-ம் சுரங்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 தினங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி விஜய் நடித்த காட்சிகள் படமாக்கிக் கொண்டிருக்கும்போது, வருமான வரித் துறையினர் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று, விசாரணைக்காக விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணை முடிந்து இன்று மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. 2-ம் சுரங்கத்தினுள் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை 2-ம் சுரங்க நுழைவாயிலில் திரண்ட பாஜகவினர், நெய்வேலியில் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையப் பகுதிககள் தடை செய்யப்பட்ட பகுதி.

அங்கு எப்படி ஷூட்டிங் நடத்த எப்படி அனுமதி வழங்கினீர்கள். பணம் கொடுத்தால் ஷூட்டிங் நடத்தலாம் என்றால், நாங்களும் பணம் செலுத்துகிறோம், எங்களையும் செல்ஃபி எடுக்க அனுமதிக்க வேண்டும். மேலும் 2-ம் சுரங்கத்தினுள் மாரியம்மன் கோயில் உள்ளது.

அந்தக் கோயிலுக்கு கிராம மக்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். திரைப்படப் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கும்போது, கிராம மக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் எனக் கூறி பாஜக மாவட்டத் தலைவர் சரவணசுந்தரம் தலைமையில் 30-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த மந்தாரக்குப்பம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி வருகின்றனர். சுரங்கத்தினுள் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நெய்வேலி சுரங்கத்தினுள் இயங்கும் ராட்சத இயந்திரத்தின் மீது நடிகர் சரத்குமார்-விசித்ரா நடித்த 'அரவிந்தன்' பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இது தவிர நடிகர் விசு இயக்கிய 'அவள் சுமங்கலிதான்', இயக்குநர் சேரன் நடித்த 'சொல்ல மறந்த கதை', சமுத்திரக்கனி நடித்த 'சாட்டை', 'அப்பா' போன்ற திரைப்படங்கள் கடந்த காலங்களில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x