அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் லட்சுமி நரசிம்மன் மரணம்: மு.க.ஸ்டாலின் இரங்கல்

லட்சுமி நரசிம்மன்: கோப்புப்படம்
லட்சுமி நரசிம்மன்: கோப்புப்படம்
Updated on
1 min read

அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் (51) மாரடடைப்பால் இன்று காலையில் சேலம் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அண்மையில், 7 நாட்கள் நடந்த மருத்துவர்களின் காலவரையற்ற போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர்களில் முக்கியமானவர் லட்சுமி நரசிம்மன். போராட்டத்தில் ஈடுபட்ட 120 மருத்துவர்கள் தொலைதூரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். தருமபுரி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய லட்சுமி நரசிம்மன், ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.

லட்சமி நரசிம்மன் மறைவு குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் திடீரென்று மறைவெய்தினார் என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு சொல்லொணாத் துயரமுற்றேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பணியில் சேவையாற்றி வந்த லட்சுமி நரசிம்மன், அண்மையில் 7 நாட்கள் நடந்த மருத்துவர்களின் காலவரையற்ற போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர்களில் முக்கியமானவர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 120 மருத்துவர்களை அநியாயமாகத் தொலைதூரத்துக்கு இடமாற்றம் செய்தது அதிமுக அரசு. அதில் தருமபுரி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய லட்சுமி நரசிம்மன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வந்த அவர் திடீர் மாரடைப்பால் மறைந்திருப்பதற்கு அதிமுக அரசே முழு காரணம்.

அதிமுக அரசின் இந்த அராஜகத்தையும் அடக்குமுறைகளையும் மருத்துவர்களின் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது. லட்சுமி நரசிம்மனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in