

டார்னியர் விமான விபத்தில் உயிரிழந்த 3 விமானிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கடலோர காவல்படையைச் சேர்ந்த இளம் வீரர்களான வித்யாசாகர், எம்.கே.சோனி மற்றும் சுபாஷ் சுரேஷ் ஆகியோர் கடந்த ஜூன் 8-ம் தேதி ‘டார்னியர்’ரக விமானத்தில் கண்காணிப்பு ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது விமானத்துடன் காணாமல் போயினர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு வீரர்களின் எலும்புகள் கடலுக்கடியில் இருந்து மீட்கப்பட்டன. உரிய பரிசோதனைகளின் மூலம், 3 வீரர்களின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
(சுபாஷ் சுரேஷ் மனைவி தீபலட்சுமி ரவிச்சந்திரனிடம் முதல்வர் நிதியுதவி வழங்கியது)
இதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, வீரர்களின் குடும்பத்தினரிடம் தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.
(வித்யாசாகர் மனைவி டி.சுஷ்மா சார்பில் கமாண்டன்ட் சந்திர மவுலி மற்றும் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.பி.ஷர்மான் ஆகியோர் முதல்வரிடம் நிதியை பெற்றுக்கொண்டது)
எம்.கே.சோனியின் மனைவி அம்ருதா சோனி, சுபாஷ் சுரேஷ் மனைவி தீபலட்சுமி ரவிச்சந்திரன், வித்யாசாகர் மனைவி டி.சுஷ்மா சார்பில் கமாண்டன்ட் சந்திர மவுலி மற்றும் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.பி.ஷர்மான் ஆகியோர் நிதியை பெற்றுக்கொண்டனர். பின்னர், முதல்வருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்'' என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.