Published : 07 Feb 2020 07:58 AM
Last Updated : 07 Feb 2020 07:58 AM

பழநியில் நாளை தைப்பூசத் திருவிழா- குவியும் பக்தர்களால் நகரமே விழாக்கோலம்

பழநியில் நாளை தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பழநியில் குவிவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள் ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி யில் தைப்பூசத் திருவிழா பெரிய நாயகியம்மன் கோயிலில் பிப். 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தந்தப் பல்லக்கு, காமேதேனு, தங்கமயில் வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

இன்று திருக்கல்யாணம்

விழாவின் ஆறாம் நாளான (பிப்.7) இன்று இரவு 8 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் நடை பெறுகிறது.

தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமி வெள்ளித்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசம் நாளை (பிப்., 8) நடைபெறுகிறது. இதையொட்டி தைப்பூசத் தேரோட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. தேரோட்டத்தைக் காண தமிழகம் முழுவதுமிருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக பழநி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் மலைக்கோயிலில் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய் கின்றனர்.

அதிகாலை நடை திறப்பு

தைப்பூசத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு பழநி மலைக்கோயில் நடைதிறக் கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். காலை 5 மணிக்கு மேல் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தோளுக்கி னியாளில் சண்முகநதியில் எழுந்த ருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பகல் 12 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேரில் சுவாமி எழுந் தருள்கிறார். தேரில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

மாலையில் தேரோட்டம்

இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க நான்கு ரத வீதிகள் வழியாக வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சி யளிக்க உள்ளார்.

தேர் நிலையை அடைந்தவுடன் தந்தப் பல்லக்கில் சுவாமி தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். தைப்பூசவிழாவை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய பக் தர்கள் மலைக்கோயிலில் குவிந் துவருவதால் வழக்கமாக இரவில் நடைபெறும் தங்கத் தேரோட்டம் ரத்து செய்யப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x