Published : 06 Feb 2020 06:08 PM
Last Updated : 06 Feb 2020 06:08 PM

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயது முதிர்வின் காரணமாகவே அப்படிச் செய்தார்: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை

வயது முதிர்வின் காரணமாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனால் குனிய முடியவில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் புத்துணர்வு முகாம் இன்று (பிப்.6) தொடங்கியது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முகாமைத் தொடங்கி வைக்க முதுமலை வந்தார். முகாம் தொடங்கி வைக்கும் முன்னர் அங்குள்ள கோயிலில் பூஜைக்கு அழைக்கப்பட்டார்.

கோயிலுக்குள் செல்வதற்காக காலணியைக் கழற்ற முனைந்தார். அப்போது, அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த பழங்குடியினச் சிறுவனை அழைத்தார். ஏதாவது கேட்க அழைக்கிறார் எனத் தயங்கிய சிறுவனை, தனது காலணியைக் கழற்றி விடச் சொன்னார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, வனத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் மற்றும் அதிகாரிகள் செய்வதறியாது நின்றிருந்தனர். இதைப் பார்த்த குன்னூர் எம்எல்ஏ சாந்தி ராமு, பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்து விடாதபடி மறைத்து நின்றுகொண்டார்.

வனத்துறை அமைச்சரின் இந்தச் செயல் அங்கிருந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குழந்தைகள் நல ஆர்வலர்களிடையே அமைச்சரின் சர்ச்சையான செயல் விவாதப் பொருளானது.

இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சிறுவனை தன்னுடைய பேரனாக நினைத்து அப்படி செய்யச் சொன்னதாகக் கூறினார். அதற்காக வருத்தமும் தெரிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "அவருக்கு வயது 70-க்கு மேலாகிவிட்டது. செடி, கொடிகள் அவருடைய காலில் சிக்கிக்கொண்டன. வயது முதிர்வின் காரணமாக அவரால் குனிய முடியவில்லை. அதனால், சிறுவனை அழைத்து அதனை அகற்றச் சொல்லியிருக்கிறார். அதில் உள்நோக்கம் எதுதும் கிடையாது. முதுமையில் எல்லோருக்கும் வரும் சிரமங்கள்தான் அவருக்கும் வந்திருக்கிறது. அதனைப் பெரிதுபடுத்த வேண்டாம்" எனத் தெரிவித்தார்.

தவறவிடாதீர்

பழங்குடியினச் சிறுவனிடம் காலணியைக் கழற்றி விடச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: மக்கள் அதிர்ச்சி

சிறுவனிடம் காலணியைக் கழற்றச் சொன்ன விவகாரம்: என் பேரனாக நினைத்துச் சொன்னேன்; வருத்தம் தெரிவித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயல்: சாந்தனு காட்டம்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயல்: ஸ்டாலின் விமர்சனம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x