Last Updated : 06 Feb, 2020 12:04 PM

 

Published : 06 Feb 2020 12:04 PM
Last Updated : 06 Feb 2020 12:04 PM

'பிகில்' பைனான்சியரின் வீடு, அலுவலகங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

மதுரையில் சினிமா பைனான்சியர் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.

மதுரை காமராசர் சாலையில் வசிப்பவர் அன்புச்செழியன். அதிமுக பிரமுகரான இவர், பிரபல சினிமா பைனான்சியராகவும் உள்ளார். சமீபத்தில் வெளியாகியிருந்த 'பிகில்' திரைப்படத்திற்கும் அன்புச்செழியன் பைனான்சியராக இருந்தார்.

இவருக்கு சொந்தமான வீடுகள் மதுரை மற்றும் சென்னையிலும் உள்ளன. இந்நிலையில், நேற்று (பிப்.6) ஒரே நேரத்தில் அவரது வீடு, பைனான்ஸ் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொள்ள திட்டமிட்டனர்.

இதன்படி, மதுரை தெற்குமாசி வீதியிலுள்ள 'கோகுலம்' என்ற பெயரில் செயல்படும் அவரது பைனான்ஸ் அலுவலகத்திற்கு காலை 9.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரு தனியார் கார்களில் வந்து இறங்கினர். 10-க்கும் மேற்பட்டோர் அதிரடியாக அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்த சில ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடமும் விசாரித்தனர். அன்புச்செழியன் பற்றியும் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து மாலை வரை சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனை நீடித்தது. இதைத்தொடர்ந்து மதுரை கீரைத்துறை பகுதி மற்றும் காமராசர் சாலையிலுள்ள அவரது வீடுகளிலும் வருமானவரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

சரவணனின் வீடு

மேலும், மதுரையிலுள்ள அன்புச்செழியனின் நெருங்கிய நண்பரான சரவணன் என்பவரின் வீட்டிலும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வு நடந்த அன்புச்செழியன் வீடுகள், அலுவலகங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இச்சோதனை இன்றும் (பிப்.6) நீடிக்கிறது.

முன்னதாக, நடிகர் விஜய் நடித்த 'பிகில்' படத்தை எடுத்த ஏஜிஎஸ் நிறுவனம், வீடு உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர். அதன் எதிரொலியாக நெய்வேலி நிலக்கரி சுரங்கம் பகுதியில் 'மாஸ்டர்' படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் 6 பேர் அடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் குழு நேரில் சென்று விசாரணை நடத்தியது.

பின்னர் அவரை தனி விடுதிக்கு அழைத்துச் சென்றனர். அவரை வருமான வரித்துறையினர் சென்னைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், இன்றும் சோதனையை தொடர்ந்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x