

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் போன்ற அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்து ஆசிரியர்கள் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி விமலா அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 9-வதுபட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பிஎட், எம்எட் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை முடித்த 51,364 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக அளவில் சிறந்த விளங்கிய 36 மாணவர்கள் உட்பட 153 பேருக்கு ஆளுநர் நேரடியாக பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
இந்த விழாவில் பட்டமளிப்பு உரையாற்றிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி விமலா கூறியதாவது:
தமிழகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் இடைநிற்றல் வாய்ப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பில் 21-ஏ பிரிவின்கீழ் உள்ள இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக கல்வி வழங்கப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள இதுபோன்ற முக்கிய அம்சங்களை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எடுத்துரைத்து ஆசிரியர்கள்தான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
வாழ்க்கை குறித்த தெளிவற்ற புரிதலால் தற்கொலை போன்ற தவறான முடிவுகளை நோக்கி மாணவர்கள் செல்கின்றனர். ஒவ்வொரு தடவையும் விழுந்து எழுவதே வாழ்க்கை என்பதை அவர்களுக்கு ஆசிரியர்கள் உணர்த்த வேண்டும். குழந்தைகளுக்கு படிப்பை தாண்டி விளையாட்டு போன்ற இதர துறைகளின் மீதுள்ள ஆர்வத்தையும் ஊக்கப்படுத்த வேண்டும். தற்போதைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க அறிவுறுத்த வேண்டும். மேலும், அனைத்து குழந்தைகளும் தாய்மொழியில் கற்றுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
இன்றைய தலைமுறையினர் விரல்நுனியில் தகவல் தொழில்நுட்பத்தை வைத்துள்ளனர். அதனால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உங்களை மேம்படுத்திக் கொண்டே இருப்பது அவசியம். எதிர்கால ஆசிரியர்களான நீங்கள்,உங்களின் மாணவர்களை நன்னெறிப்படுத்தி ஒழுக்கத்துடன் வாழ்வதற்கு வழிகாட்ட வேண்டும். இதன்மூலம் சட்டங்கள் இல்லாமலேயே குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தவிர்க்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசும்போது, ‘‘பிஎட் பல்கலை.யில் புதிதாக சிறப்புக் கல்வி, வழிகாட்டுதலும் அறிவுரை பகிர்தலும், பெண் கல்வி, கல்வி அளவிடுதல் மற்றும் மதிப்பிடுதல் ஆகிய துறைகள் தொடங்கப்பட உள்ளன. வரும் கல்வியாண்டில் சேலம் எடப்பாடி மற்றும் விழுப்புரம் மாத்தூர் பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, ஒருங்கிணைந்த பிஎஸ்சி, பிஎட் படிப்பு அமல்படுத்தபடும்’’ என்றார்.
முன்னதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.பஞ்சநாதம் வரவேற்புரை நிகழ்த்தி, ஆண்டு அறிக்கையை வெளியிட்டார். விழாவில் உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா, பல்கலைக்கழக பதிவாளர் வி.பாலகிருஷ்ணன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.கோவிந்தன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.