Published : 06 Feb 2020 07:39 AM
Last Updated : 06 Feb 2020 07:39 AM

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு துணை முதல்வர்: ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று காலை விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சென்னை

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் உள்ளிட்டோரால் பாடல்பெற்ற தலம் திருவான்மியூரில் உள்ள திரிபுரசுந்தரி அம்மை உடனுறை மருந்தீஸ்வரர் கோயிலாகும்.

இக்கோயிலின் குடமுழுக்கு விழா முடிந்து 12 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், கோயில் ராஜகோபுரங்கள் மற்றும் இதர சந்நிதிகளின் திருப்பணிகள் கடந்த ஆண்டு ஜூன் 6-ம் தேதி பாலாலயத்துடன் தொடங்கியது.

இப்பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் மருந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது.

இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சேவூர் ராமச்சந்திரன், அறநிலையத் துறைச் செயலர் அசோக் டோங்ரே, ஆணையர் பணீந்திர ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, கடந்த ஜனவரி 31-ம் தேதி மகாகணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. பிப். 1-ம் தேதி மூர்த்தி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள், பிப். 2-ம் தேதி கோ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து பிப்.3 மற்றும் 4-ம் தேதிகளிலும் பல்வேறு விஷேச யாக சாலை பூஜைகள் நடைபெற்ற நிலையில், நேற்று காலை 9.30 மணிக்கு புனிதநீர் நிரம்பிய குடங்களுடன் சிவாச்சாரியார்கள் ராஜகோபுரங்கள், விமான கோபுரங்களின் கலச பகுதிக்குச் சென்று, புனித நீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

மேலும், குடமுழுக்கு விழாவைக் காண திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் முன்பு, கிழக்கு கடற்கரைச் சாலையில் குவிந்திருந்த பக்தர்கள் மீது சிவாச்சாரியார்கள் புனித நீரை தெளித்தனர். அதன்பின், தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.

குடமுழுக்கு விழாவின் ஒருபகுதியாக, நேற்று இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா மற்றும்தியாகராஜ சுவாமி திருக்கல்யாணம், திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x