Published : 06 Feb 2020 07:19 AM
Last Updated : 06 Feb 2020 07:19 AM

செந்தில்பாலாஜியின் வீட்டை சோதனை செய்ய தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜியின் சென்னை வீட்டை சோதனை செய்ய தடை விதிக்கக்கோரி விடுக்கப்பட்ட முறையீட்டை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து நிராகரித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த செந்தில்பாலாஜி, அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக செந்தில்பாலாஜியின் கரூர் வீட்டில் சோதனை நடத்திய போலீஸார், சென்னையில் உள்ள வீட்டை சீல் வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் தரக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பிப்.7 வரை அவரையும், அவரது சகோதரரையும் கைது செய்யக்கூடாது என அரசு தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பாக செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன், ‘‘மனுதாரரின் சென்னை வீட்டை சோதனை செய்ய வேண்டும் என போலீஸார் நோட்டீஸ் அனுப்பிஉள்ளனர். அவர் வீட்டின் பூட்டைத் திறந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்தால் பூட்டை உடைத்து சோதனை நடத்தப்படும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். அந்த நோட்டீஸூக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து முறையீடு செய்தார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், ‘‘முறையாக சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவரிடம் அனுமதி பெற்று அதன் பிறகுதான் போலீஸார் ஒவ்வொரு இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இது விசாரணை நடைமுறை. இதில் மனுதாரர் தரப்பு குறுக்கிட முடியாது. நீதிமன்றமும் விசாரணை செய்யக்கூடாது என தடை விதிக்கவில்லை" என்றார்.

அதையடுத்து நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, ‘‘இந்த நீதிமன்றம் முன்ஜாமீன் தொடர்பான வழக்கை மட்டுமே விசாரித்து வருகிறது. அந்த வழக்கிலும் இறுதியாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இந்த சூழலில் மனுதாரரின் வீட்டை சோதனை செய்ய போலீஸாருக்கு தடை விதிக்க முடியாது. இதுபற்றிதனி மனுத் தாக்கல் செய்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில்தான் பரிகாரம் தேட முடியும்" எனக்கூறி முறையீட்டை நிராகரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x