Published : 06 Feb 2020 06:57 AM
Last Updated : 06 Feb 2020 06:57 AM

திமுகவுக்காக களமிறங்கியது பிரசாந்த் கிஷோரின் ‘ஐ-பேக்’ நிறுவனம்: தேர்தல் வேலைகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி தொடக்கம்

வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்த லில் திமுகவுக்காக தேர்தல் பணி யாற்ற ஒப்பந்தம் செய்துள்ள பிரசாந்த் கிஷோரின் ‘ஐ-பேக்’ நிறுவனம் தனது பணியை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக தேர்தல் பணிக்கான ஆட்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2021 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க உள்ளது. 50 ஆண்டுகள் திமுக தலைவராகவும், 19 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்த கருணாநிதி இல்லாத நிலை யில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவை ஆட்சியில் அமர்த்த அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.

கருணாநிதி இல்லாத நிலை யிலும் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் திமுக 39-ல் வென் றது. ஆனால், அப்போது நடந்த 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் 13-ல் மட்டுமே திமுக வென்றது. மக்களவைத் தேர்தலில் கிடைத்த 99 சதவீத வெற்றி, சட்டப் பேரவை இடைத்தேர்தலிலும் கிடைத்திருந்தால் 2019லேயே திமுக ஆட்சி அமைத்திருக்கும். மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகியிருப் பார். ஆனால், அது நடக்கவில்லை.

அதன்பிறகு நடந்த விக்கிர வாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும் திமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. வேலூர் மக்களவைத் தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வென்றது. 27 மாவட் டங்களில் நடைபெற்ற ஊரக உள் ளாட்சித் தேர்தலிலும் திமுகவுக்கு 50 சதவீத வெற்றியே கிடைத்தது.

இதற்கிடையில், 2021-ல் தனிக்கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். அவர் இதுவரை கட்சி தொடங்கா விட்டாலும், அவ்வப்போது திமுகவுக்கு எதிராக பேசி வருகிறார். எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான பணிகளில் ஸ்டாலின் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ‘இந்திய அரசியல் செயல்பாட்டுக் குழு’ (‘ஐ-பேக்’) என்ற நிறுவனத்துடன் திமுக ஒப் பந்தம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஸ்டாலின் கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, திமுகவுக்கான தேர்தல் பணிகளை ஐ-பேக் தொடங்கி யுள்ளது.

2014 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி, 2015 பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமார், 2017 பஞ்சாப் பேரவைத் தேர்தலில் அம்ரீந்தர் சிங், 2017 உத்தர பிரதேச பேரவைத் தேர்தலில் ராகுல் காந்தி, 2019 ஆந்திர பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டிக்காக ஐ-பேக் பணியாற்றியது. இதில் உத்தர பிரதேசம் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வெற்றியே கிடைத்தது.

வரும் 8-ம் தேதி நடக்க உள்ள டெல்லி பேரவைத் தேர்தலில் அர்விந்த் கேஜ்ரிவாலுக் காக ஐ-பேக் பணியாற்றி வருகிறது. தமிழகத்தோடு பேரவைத் தேர்தல் நடக்க உள்ள மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்காக ஐ-பேக் பணியாற்ற உள்ளது. எனவே தான் ஸ்டாலினும் இந்த நிறுவனத்தை தேர்வு செய்துள்ள தாக திமுகவினர் கூறுகின்றனர்.

14 பிரிவுகளில் ஆள்தேர்வு

தமிழகத்தில் தேர்தல் பணி களுக்கான நபர்களை தேர்வு செய்யும் பணியை ஐ-பேக் தனது இணையதளம் மூலம் தொடங்கி யுள்ளது. பொதுவான பணி, குறிப் பிட்ட பணி என்ற இரு பிரிவுகளைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்குமாறு கோரியுள்ளது.

குறிப்பிட்ட பணி என்ற பிரிவில் தகவல் பகுப்பாய்வு, டிஜிட்டல் மார்க்கெட்டிங், செயல்பாடு, களப்பணி, கிராஃபிக் டிசைன் & வீடியோ, மனிதவளம், தலைமைப் பணி, ஊடகம் - மக்கள் தொடர்பு, கொள்கை ஆய்வு மற்றும் நுண் ணறிவு, தொழில்நுட்பம், டிஜிட்டல் தகவல் தொடர்பு, நிதி - கணக்கு பராமரிப்பு, சட்டம், வரவேற்பாளர் என்று 14 பிரிவுகள் குறிப்பிடப் பட்டுள்ளன.

இதுதவிர ஆண்ட்ராய்டு மொபைல் செயலி டெவலப்பர், டிஜிட்டல் தொழில்நுட்ப பிரச்சாரம், இணையதள வடிவமைப்பு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், வீடியோக்கள் உருவாக்குவதற்கான கருத்துகளை உருவாக்குவோர் என்று 36 பிரிவு களை குறிப்பிட்டு அதற்கு விண்ணப் பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

அதில் பெயர், தொலைபேசி எண், இமெயில் முகவரி, பிறந்த தேதி, சொந்த மாநிலம், நிபுணத் துவம் பெற்ற மொழி ஆகிய தனிப் பட்ட தகவல்களும், 10, 12-ம் வகுப்பு மதிப்பெண்கள், இளநிலை, முது நிலை பட்டப்படிப்பு மதிப்பெண்கள், படித்த கல்லூரி குறித்த விவரங்கள், தற்போது செய்யும் பணி, நிறுவனம் போன்ற விவரங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளன.

இதுபற்றி ஐ-பேக் அலுவல கத்தை தொடர்புகொண்டு விசாரித் தபோது, “அனைத்து விவரங்களும் இணையதளத்தில் கொடுக்கப்பட் டுள்ளன. மற்ற மாநிலங்களைப் போல எந்தக் கட்சிக்காக பணி யாற்றுகிறோமோ, அந்தக் கட்சி ஊழியர்களையும் பயன்படுத்திக் கொள்வோம். எந்த வேலையாக இருந்தாலும், அதில் நிபுணத் துவம் பெற்றவர்களை பயன்படுத்து வதுதான் ஐ-பேக் பாணி. அதற்காக ஆட்கள் தேர்வு நடக்கிறது’’ என்றனர்.

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் நூற்றுக்கணக்கில் தானே ஆட்களை நியமித்து தேர்தல் பணிகளை ஐ-பேக் மேற் கொள்ளப் போவதாக தகவல் வெளி யாகியுள்ளதால், தாங்கள் வழக்க மாக விருப்பத்துடன் எடுத்துச் செய்யும் தேர்தல் பணிகளில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படும் என்று திமுக நிர்வாகிகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பேசியபோது, திமுக நிர்வாகிகள் சிலர் கூறிய தாவது:

காலத்துக்கேற்ற மாற்றம்

வாக்குச் சாவடி அளவில் கிளை கமிட்டிகள் கொண்ட திமுக வலு வான கட்டமைப்பைக் கொண்டது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர், அவர்கள் எந்தெந்த கட்சிக்கு வாக் களிப்பவர்கள், கட்சி சாராதவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் என்று துல்லியமாக கணக்கெடுப்பது, வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்ப்பது, வீடு வீடாகப் பிரச்சாரம் செய்வது, வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள் வீடு வீடாகச் செல்வது, வாக்குப் பதிவு நாள் பணிகள் என அனைத்தையும் மிகச் சிறப்பாக செய்து வருபவர்கள் திமுகவினர்.

தேர்தலில் கொடி கட்டுவது தொடங்கி பிரச்சார நோட்டீஸ் விநி யோகிப்பது வரை பசி, தூக்கமின்றி அர்ப்பணிப்பு உணர்வோடு சுற்றிச் சுழலும் தொண்டர்களுக்குப் பெயர் பெற்றது திமுக. குடும்பம்கூட இரண்டாம் பட்சம்தான் என்று நேரம், காலம் பார்க்காமல் சுழலும் தொண்டர்கள்தான் திமுகவின் வெற்றிக்கான அடிப்படை என்பதை எங்கள் தலைவர்கள் திரும்பத் திரும்ப பெருமையுடன் சொல்வார் கள். அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வு, இப்படி வெளியில் இருந்து அமர்த்தப்படும் தனியார் குழுவினருக்கு இருக்குமா என்று தெரியவில்லை. ஐ-பேக் என்ன வேலைகளை செய்யப் போகிறது என்பதும் தெரியவில்லை.

தேர்தல் களத்தில் அவர்களோடு நாங்கள் எந்தவிதத்தில் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதை கட்சித் தலைமை தெளிவுபடுத்து வது முக்கியம். மற்றபடி, கால மாற்றத்துக்கு ஏற்ப, வெற்றிக்கான வியூகம் அமைப்பதிலும், தகவல் தொழில்நுட்ப உத்திகளை பயன் படுத்திக் கொள்வதிலும், இது போன்ற வல்லுநர்களை இணைத் துக்கொண்டு செயல்படுவதில் தவறு இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என்ன சொல்கின்றனர்?

முன்னாள் அமைச்சர், திமுக தீர்மானக் குழு இணைச் செயலா ளர் வீ.சத்தியமூர்த்தி: 40 ஆண்டு களுக்கு முன்பு மேடை போடுவது, போஸ்டர் ஒட்டுவது, கொடி கட்டு வதை தொண்டர்கள் செய்தனர். இப்போது அனைத்தும் ஒப்பந்த தாரர் மூலம் செய்யப்படுகிறது. எல்லா கட்சியிலும் இந்த நிலை தான். தொண்டர்களுக்கு சிந்திக்க தெரிகிறது. ஆனால் செயலாற்ற முடியவில்லை. தனி மனிதனால் முடியாததை ஐ-பேக் போன்ற நிறுவனங்கள் செய்து தருகின்றன. இது தொண்டர்களை இன்னும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வைக்கும்.

மனிதநேய ஜனநாயகக் கட்சி யின் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி அஜ்மல் தீன்: ‘அழைக்கின்றார் அண்ணா, ஓடி வருகிறான் உதய சூரியன், உடன்பிறப்பே கழக உடன் பிறப்பே’ என்ற இசை முரசு நாகூர் ஹனீபாவின் கழகப் பாடல்கள்தான் திமுகவின் முக்கிய பிரச்சார பீரங்கி யாக இருந்தது.

இந்தப் பாடல்கள் திமுக தொண்டர்களுக்கு நல்ல உந்துசக்தியைக் கொடுத்தன. இன்று அரசியல் கட்சிகளும் நிறு வனங்கள் போல கார்ப்பரேட் மய மாகிவிட்டன. அதற்கேற்ப தொண் டர்களும் மாறத் தொடங்கிவிட்டனர். எனவே, வியூகங்கள் வகுக்க பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்ததில் ஆச்சரியம் இல்லை.

விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்கேஎம் மீனாட்சிசுந்தரம்: தொண்டர்களே இல்லாமல், வெறு மனே கார்ப்பரேட் நிறுவனம் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டால் உ யிரோட்டம் இருக்காது. எல்லாம் செயற்கைத் தனமாகவே இருக்கும். அண்ணாவும், கலைஞரும் இது போல செய்யவில்லை. ஸ்டாலின் மட்டும் ஏன் செய்கிறார். இது சரி யான அணுகுமுறை கிடையாது. இதுபோன்ற நிறுவனங்கள் வருங்காலத்தில் மாவட்டம் தோறும் கிளை அலுவலகம் தொடங்கினாலும் ஆச்சரியப்படு வதற்கு இல்லை.

கள்ளிக்குடி தாலுகா ஓடைப் பட்டி கிராம திமுக தொண்டர் சங்காரெட்டி (56): பிரசாந்த் கிஷோர் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் களத்தில் வந்து வேலை செய்யவா போகிறார்கள்? எங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்தவர்களுக்கு யோசனை சொல்வார்கள், வேலை வாங்குவார்கள். ஆனாலும், கட்சி யில் தொண்டர்கள்தான் எப்போதும் ‘கிங்’. இதை மாற்ற யாராலும் முடியாது.

சின்னமனூர் காங்கிரஸ் தொண் டர் காளியப்பன்: அரசியலை நம்பி குடும்பத்தை தொலைத்தது அந்த காலம். அது மாறிவிட்டது. இதனால் தொண்டர்களின் உணர்வுகளும் மாறிவிட்டது. 2000-ம் ஆண்டில் இருந்தே ஒப்பந்த அடிப்படையில் கொடிகள் கட்டப்படுகின்றன. கட்சித் தொண்டர்களின் தியாகம், விசுவாசத்துக்கு இங்கு மதிப்பு இல்லை. இதனால், காசு வாங்காமல் யாரும் வேலை பார்ப்பது இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x