

ரஜினிக்கு இன்னும் அரசியல் புரியவில்லை என, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று (பிப்.5) தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தும் அதற்கு எதிரான போராட்டங்கள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் நான் முதல் ஆளாகக் குரல் கொடுப்பேன். அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. சில அரசியல் கட்சிகள் அவர்களுடைய சுய லாபத்துக்காக போராட்டங்களைத் தூண்டி விடுகின்றன. இதற்கு மதகுருக்களும் துணை போகிறார்கள். இது மிகவும் தவறான விஷயம்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, சென்னை லயோலா கல்லூரி மாணவர்களிடம் உதயநிதி கையெழுத்து பெற்றார்.
அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பில்லை என ரஜினிகாந்த் கூறியிருப்பது குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த உதயநிதி, ''நடிகராக இருப்பதால் ரஜினிக்கு அரசியல் புரியவில்லை. மாணவர்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. நாடு முழுக்க உள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ரஜினி இப்போது நடிகராக இருப்பதால், அரசியல் இன்னும் சரியாகப் புரியவில்லை. அவர் அரசியல் கட்சி தொடங்கியதும் நான் பதில் சொல்கிறேன்" என பதில் தெரிவித்தார்.
தவறவிடாதீர்