சிறுவர்களை சீரழிக்கும் ஆன்லைன் ‘பப்ஜி கேம்’: காரைக்குடி அருகே ரூ.1 லட்சம் முதல் பரிசுடன் போட்டி நடத்த ஏற்பாடு- சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி

சிறுவர்களை சீரழிக்கும் ஆன்லைன் ‘பப்ஜி கேம்’: காரைக்குடி அருகே ரூ.1 லட்சம் முதல் பரிசுடன் போட்டி நடத்த ஏற்பாடு- சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி
Updated on
1 min read

சிறுவர், இளைஞர்களை சீரழிக்கும் ஆன்லைன் ‘பப்ஜி கேம்’-ஐ சமூக ஆர்வலர் தடை செய்ய வலியுறுத்தி வரும்நிலையில், ரூ.1 லட்சம் முதல் பரிசுடன் காரைக்குடி அருகே போட்டி நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. இதனால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபகாலமாக சிறுவர்கள் முதல் பெரியோர் வரை ஆன்லைன் ‘பப்ஜி கேமிற்கு’ அடிமையாக உள்ளனர். இந்த விளையாட்டை மொபைலிலே விளையாடலாம் என்பதால் இரவு, பகல் என பாராமல் சாப்பிடாமல், தூங்காமல் விளையாடி வந்தனர்.

இந்த விளையாட்டை விளையாட விடாமல் பெற்றோர் தடுத்ததால் சிறுவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். மாணவர்கள் பலர் பள்ளி, கல்லூரிக்குச் செல்லாமல் விளையாட்டில் மூழ்கினர். இதையடுத்து இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து ‘பப்ஜி கேம்’-ஐ ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே விளையாட முடியும் என்ற வரையறையை அரசு கொண்டு வந்தது.

இருந்தபோதிலும் இந்த விளையாட்டை முழுமையாக தடை செய்ய வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் காரைக்குடி அருகே கல்லலில் மாசி மாத தேர் திருவிழாவையொட்டி தனியார் மொபைல் கடை சார்பில் ‘பப்ஜி கேம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. முதல் பரிசு ரூ.1 லட்சம், 2-ம் பரிசு ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.20 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு போட்டிக்கு 25 குழுக்கள் அனுமதிக்கப்படுவர். ஒரு குழுவில் 4 பேர் இடம்பெறலாம். இந்த போட்டியில் பங்கேற்க இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போட்டி நடத்தும் நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘ஸ்மார்ட் போன் வைத்துள்ள அனைவரிடமும் ‘பப்ஜி கேம்’ பிரபலமாகி வருகிறது. ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த போட்டியை நடத்துகிறோம். போட்டியின்போது ஆன்லைன் பாதிப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். இந்த போட்டியில் மொத்தம் 2,500 பேர் பங்கேற்கின்றனர். ஒரு குழுவிற்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கிறோம், என்று கூறினர்.

தடை செய்ய வேண்டிய விளையாட்டை, பிரபலப்படுத்தி போட்டியாக நடத்துவதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in