

பெரிய கோயில் குடமுழுக்கின் போது கருடன் பறந்ததால் பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர்.
தஞ்சைப் பெரிய கோயிலில் இன்று (பிப்.5) குடமுழுக்கை முன்னிட்டு, கோயில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கடந்த 1-ம் தேதி ஒன்றாம் கால பூஜை தொடங்கி, நேற்றுடன் ஏழாவது கால பூஜை நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று காலை எட்டாவது கால பூஜை நடைபெற்றது.
இதையடுத்து, காலை 9.30 மணிக்கு பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா தொடங்கியது. காவிரி மற்றும் அதனுடன் இணையும் கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் இருந்து பெறப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர், கோயில் கலசத்தில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. மேலும், கோயிலின் கொடிமரத்திலும் விமானங்கள் அனைத்திலும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அவற்றுக்குத் தீபாராதனையும் நடைபெற்றது.
இதனிடையே, குடமுழுக்கு நடைபெற்றபோது, கலசத்தின் மேலே கருடன் வட்டமிட்டது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. அப்போது, 'கருட பகவான் வந்துவிட்டான்' என ஒலிப்பெருக்கியில் அறிவித்தனர். இதையடுத்து, அங்கு குழுமியிருந்த பக்தர்கள், கருட பகவானை வான் நோக்கி வழிபட்டனர்.
பெரிய கோயில்களின் குடமுழுக்கு விழாவின்போது, கருடன் பெரும்பாலும் கலசத்திற்கு மேலே வட்டமடிப்பது வழக்கம். இன்றும் கருடன் வட்டமிட்டது பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.