

தமிழகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்வைபள்ளிக்கல்வித் துறை ரத்து செய்துள்ளது. இதை அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: பிஞ்சுப் பருவத்திலேயே மாணவர் களின் கல்வி உரிமையை பறித்து, அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடக்கம் முதலேதிமுக கடுமையாக வலியுறுத்தியது. தற்போது திடீர் ஞானோதயம் ஏற்பட்டதுபோல பொதுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளனர். இதிலாவது தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரம், விளம்பரம் கிடைக்கும் விஷயங்களுக்காக மட்டும் குரல் கொடுக்கும் திமுக, மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதில் தோல்வி அடைந்துவிட்டது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பொதுத் தேர்வு நடைமுறை 5, 8-ம் வகுப்பு குழந்தைகளிடம் உளவியல் ரீதியான பாதிப்புகளை உருவாக்கும் நிலை இருந்தது. தற்போது அந்த அறிவிப்பை தமிழகஅரசு ரத்து செய்தது வரவேற்கத்தக்கது. இது பெற்றோர், மாணவர்களிடம் ஏற்பட்ட அச்சத்தை அகற்றியுள்ளது. எதிர்காலத்திலும் 5, 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தும் நிலைபாட்டை தமிழக அரசு முழுமையாக கைவிட வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: பொதுத் தேர்வு அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற்றிருப்பது தற்காலிக பின்வாங்குதலாக தெரிகிறது. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால் தமிழக அரசு 5, 8-ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத் தேர்வை அறிவிக்கும் ஆபத்து உள்ளது. எனவே, தேசிய கல்விக் கொள்கையில் அறிவித்தாலும், தமிழகத்தில் பொதுத் தேர்வை நடத்த மாட்டோம் என்று தமிழக அரசு உறுதி அளிக்க வேண்டும்.
கல்வியாளர்கள் கருத்து
பேராசிரியர் தி.ராசகோபாலன்: வளர்ந்த நாடுகளில்கூட பள்ளிகளில் 10 வயது வரை மாணவர்களுக்கு எந்த தேர்வும் வைக்கப்படாது. அந்த வயதில் குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு குறித்த புரிதல் இருக்காது. எனவே, 5-ம் வகுப்புக்கு ரத்து செய்தது நல்லமுடிவு. ஆனால், 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு வைத்திருக்கலாம். ஏனென்றால், முந்தைய காலத்திலேயே 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைமுறை இருந்தது. அதனால் தொடக்கக் கல்வியில் மாணவர்கள் திறன்மிக்கவர்களாக இருந்தனர். தவிர, மாணவர்களை மதிப்பீடு செய்ய தேர்வுகள் அவசியம். தேர்வு இல்லாவிட்டால் மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் குறைந்துவிடும்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்ரமணி: 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை உருவாக்கும். புரிந்து படிக்கும் திறன் குறைந்து, மனப்பாடம் செய்வதை நோக்கி மாணவர்கள் தள்ளப்படுவார்கள். எனவே, பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதில் மகிழ்ச்சி. இனிவரும் காலங்களிலும் 5, 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தக் கூடாது. ஒரேமாதிரியான தேர்வு நடைமுறையால் மாணவர்களின் திறன்களை கண்டறிய முடியாது. எனவே, மாணவர்களிடம் தனித்திறன் பயிற்சி அளிக்கும் வகையில் கற்பித்தல் முறையை தமிழக அரசு மாற்ற வேண்டும்.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் வே.மணிவாசகம்: 5-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வை ரத்து செய்தது வரவேற்கத்தக்கது. அதேநேரம், 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வை வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் அடுத்தக்கட்ட வகுப்புகளுக்கு செல்ல இந்ததேர்வு பெரிதும் உதவிகரமாக இருந்திருக்கும். மறுபுறம், கல்வித் துறையின் இத்தகைய முரண்பாடான தொடர் அறிவிப்புகள் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடாமல், இதுபோன்ற முக்கிய விவகாரங்களில் கல்வித் துறை அவசரப்படாமல் தொலைநோக்கு பார்வையுடன் நன்கு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கம், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கூட்டணி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, தனியார் பள்ளிகள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களும் அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.