பட்ஜெட், சட்டம் - ஒழுங்கு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை

பட்ஜெட், சட்டம் - ஒழுங்கு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை
Updated on
1 min read

முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம்நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பட்ஜெட் மற்றும் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

2020-21-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் இம்மாதஇறுதி அல்லது மார்ச் முதல்வாரத்தில் தாக்கல் செய்யப்படஉள்ளது. பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

முதல்வர் பழனிசாமி தலை மையில் காலை 10.30 மணிக்கு தொடங்கிய அமைச்சரவைக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

மேலும், தலைமைச் செயலர் கே.சண்முகம், நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன், உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் இதர துறைகளின் செயலர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

மக்கள் நலத் திட்டங்கள்

தமிழகத்தில் உள்ள 34 துறைகளின் சார்பில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு தொடர்ந்து நிதி வழங்குவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.

வருவாய், சமூகநலத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் அவற்றுக்கு தேவையான நிதி ஒதுக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

சட்டம்-ஒழுங்கு

குடியுரிமைச் சட்டம், தேசியகுடியுரிமை பதிவேடு போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக மற்றும் சில அமைப்புகள் பிரச்சாரம் செய்து வருகின்றன.

அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், அதைத் தடுக்கக் கோரி தமிழக பாஜக நிர்வாகிகள் முதல்வர் பழனிசாமியை நேற்று முன்தினம் சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்தும், சட்டம்-ஒழுங்கு நிலை தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர, கரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக சுகாதாரத் துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பை திரும்பப் பெற பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில். கூட்டம் நிறைவடைந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களுக்கு அறிவுரை

அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர், முதல்வரும், துணை முதல்வரும் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஊடகங்களில் இஸ்லாமியர்கள் குறித்து பேசியிருந் தார். அவரிடம் இனி இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in