

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முன்பு ஜிஎஸ்டி சாலையில், ரூ.9 கோடியே 7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சட்டப்பேரவையில் விதி 110-ன்கீழ், பெருகி வரும் வாகன போக்குவரத்தால் பல்லாயிரக்கணக்கான பாதசாரிகள் சாலையை பாதுகாப்பாகவும் எளிதாகவும் கடக்க மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பல நடைமேம்பாலங்கள் தேவை என கண்டறியப்பட்டது.
அவ்வாறு கண்டறியப்பட்டவற்றில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஆலந்தூரில் நடைமேம்பாலம் அமைக்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இரண்டு வழித்தடங்களும் உயர்மட்ட நிலையில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்திக்கின்றன. இங்கு ஒரு வழித்தடத்தில் இருந்து மற்றொரு வழித்தடத்துக்கு எளிதாக மாறிச் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மெட்ரோ ரயில் நிலையம் முன்புறம் உள்ள அதிக போக்குவரத்து மிக்க ஜிஎஸ்டி சாலையின் எதிர்புறத்தில் உள்ளஆசர்கானா பேருந்து நிறுத்தத்துக்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக சென்றடைய நடைமேம்பாலம் அமைப்பது பயனுள்ளதாக அமையும்.
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முன்புறம் ஜிஎஸ்டி சாலையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிக்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் நிதி உதவி வழங்கப்பட்டது. மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ரூ.9 கோடியே 7 லட்சம் செலவில் நடைமேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்த மேம்பாலம் 55.51 மீட்டர்நீளம், 6.41 மீட்டர் அகலம் கொண்டது. பக்கத்துக்கு ஒன்றாக 2 மின் தூக்கிகள், 4 நகரும் படிக்கட்டுகள், சிசிடிவி கேமராக்கள், நடைபாதையின் அனைத்து பகுதிகளிலும் எல்இடி மின் விளக்குகள், மாற்றுத்திறனாளிகள் நடைபாதையில் இருந்து மின்தூக்கிக்குச் செல்ல ஏதுவாக சாய்தளம், நடைபாதையில் எவர்சில்வர் கைப்பிடிகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேம்பால திறப்பு விழா நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத், தலைமைச் செயலர் கே.சண்முகம், வீட்டுவசதித் துறைச் செயலர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் த.கார்த்திகேயன், மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பன்சல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.