

போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழகத்தில் முதல்முறையாக தென்காசி மாவட்ட போலீஸாருக்கு புதிய செல்போன் செயலி அறிமுகமாகிறது.
பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு போக்குவரத்து விதிமீறல்கள் முக்கிய காரணமாக உள்ளன. விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்கள் சில சமயம் தாங்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடவில்லை என்று, நீதிமன்றத்தில் மறுக்கும்நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
வாகன ஓட்டிகளை வழிமறிக்கும்போது வாக்குவாதம், தகராறு போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு காண தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் முயற்சியின்பேரில், புதிய செல்போன் செயலி மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய செயலி குறித்து போலீஸார் கூறும்போது, “போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது எளிதாக நடவடிக்கை எடுக்க, தமிழகத்தில் முதல்முறையாக தென்காசி மாவட்ட காவல்துறையினருக்காக ‘tenkasi district traffic police’ என்றசெல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் போட்டோ, 10 விநாடிகள் வரைவீடியோ எடுக்கும் வசதி, ஜிபிஆர்எஸ் வசதி ஆகியவை உள்ளன. விதிமீறல்களில் ஈடுபடுவோர் எந்த இடத்தில், எந்த நாளில், எந்த நேரத்தில் விதிமீறலில் ஈடுபட்டனர் என்பதை போட்டோ, வீடியோ மூலம் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.
ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சென்றால், அவரை தடுத்து நிறுத்த வேண்டியதில்லை. பைக்கில் அவர் செல்வதை வீடியோவாக பதிவு செய்தவுடன், அவரது படமும், வண்டியின் எண்ணும் போலீஸ்காரரின் செயலியில்பதிவாகிவிடும். வாகன பதிவு எண்ணைக் கொண்டு, அவரது முகவரியைக் கண்டறிந்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்” என்றனர்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் கூறும்போது, “போக்குவரத்து விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் உள்ள சிலநடைமுறை சிக்கல்களுக்கு தீர்வுகாணும் வகையில் இந்த செயலி,சென்னையைச் சேர்ந்த தனியார்நிறுவன உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் இந்த செயலியை சோதனை செய்து வருகின்றனர். குறைபாடுகள் இருந்தால் மேலும் மேம்படுத்தி, செயல்வடிவத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.
யூசர் ஐடி, பாஸ்வேர்டு
இந்த செயலியை தென்காசி மாவட்ட போலீஸார் பதிவிறக்கம் செய்து, போக்குவரத்து விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுப்பர். இதற்கான யூசர் ஐடி, பாஸ்வேர்டு போலீஸாருக்கு வழங்கப்படும். ஊர்க்காவல் படையினர், போலீஸ் நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் மூலமும் இந்த செயலி வாயிலாக போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்படும்” என்றார்.