Published : 05 Feb 2020 07:25 am

Updated : 05 Feb 2020 07:25 am

 

Published : 05 Feb 2020 07:25 AM
Last Updated : 05 Feb 2020 07:25 AM

உலக அதிசயங்கள் பட்டியலில் தஞ்சை பெரிய கோயிலை சேர்க்க வேண்டும்: மாவட்ட முன்னாள் ஆட்சியர் டி.கங்கப்பா வலியுறுத்தல்

tanjore-big-temple
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனால் நிறுவப்பட்ட நந்தி சிலையின் சிறப்புகள் குறித்து தனது நண்பருக்கு விளக்கமளிக்கிறார் பெரிய கோயில் குடமுழுக்கு விழா உயர்மட்டக் குழு உறுப்பினரும் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் ஆட்சியருமான டி.கங்கப்பா (வலது). படம்: வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்

உலக அதிசயங்கள் பட்டியலில் தஞ்சாவூர் பெரிய கோயிலை சேர்க்க வேண்டும் என, தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் ஆட்சியரும், குடமுழுக்கு விழா உயர்மட்டக் குழு உறுப்பினருமான டி.கங்கப்பா தெரிவித்தார்.

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று கோயிலுக்கு வந்தடி.கங்கப்பா(81), வாராகி அம்மன்,ராஜராஜ சோழனால் அமைக்கப்பட்ட நந்தி சிலை, கருவூர்த் தேவர் சந்நிதிக்குச் சென்று சென்று வழிபட்டார். தொடர்ந்து, கோயில் அலுவலகத்துக்குச் சென்று விழா ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.


பின்னர், ‘இந்து தமிழ்’ செய்தி யாளரிடம் அவர் கூறியதாவது:

நான் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக கடந்த 1979-ம் ஆண்டு பொறுப்பேற்று ஓராண்டு காலம்தான் பணியாற்றினேன். 12.7.1979 அன்று என்னுடைய பிறந்தநாள். அன்று முதன்முறையாக எனது குடும்பத்தினருடன் இந்தக் கோயிலுக்கு வந்தேன். அப்போது விளக்குகள் இல்லை, பூஜை செய்ய போதியஅர்ச்சகர்கள் இல்லை. கோயிலைப் பார்த்து வியந்து போனேன். பின்னர் இக் கோயிலுக்கு அடிக்கடி வர ஆரம்பித்தேன்.

இதையடுத்து, 1980-ம் ஆண்டு மார்ச் மாதம் கும்பகோணத்தில் மகாமகத் திருவிழாவை சிறப்பாகநடத்தினேன். இதைத் தொடர்ந்து, அதே ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் பெரிய கோயில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. அந்த விழாவில் எந்த குறைகளும் கிடையாது. அந்த அளவுக்கு திட்டமிட்டு பணியாற்றினேன். அந்த விழாவின்போது பல லட்சம் பேர் கோயிலுக்கு வந்து சென்றனர்.

மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்திலும் சரி, மராட்டியர்கள் காலத்திலும் சரி, நான் ஆட்சியராக இருந்தபோதும் ஏப்ரல் மாதத்தில்தான் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

1980-ம் ஆண்டு குடமுழுக்கு விழாவின்போது 216 அடி உயரம் கொண்ட விமான கோபுரத்தில் ஏறியது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நினைவாகும். இது நான் கலந்துகொள்ளும் இந்தக் கோயிலின் 3-வது குடமுழுக்கு விழாவாகும்.

இந்தக் குடமுழுக்கு விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. ஆனால், தொல்லியல் துறை கொஞ்சம் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து,விழாவுக்கு இன்னும் மெருகூட்டியிருக்கலாம்.

குடமுழுக்கு விழாவையொட்டிபக்தர்கள் அதிக அளவு வரும் நிலையில் வாராகி அம்மன் சந்நிதியில் அர்ச்சகர்கள் யாரும் இல்லை. அதேபோல, மாமன்னன் ராஜராஜ சோழனால் நிறுவப்பட்ட ஒரே கல்லால் ஆன நந்தி சிலையைஎவ்வித பராமரிப்பும் இல்லாமல் வைத்திருப்பது சற்று வேதனையாக உள்ளது. அந்தச் சிலையை கொஞ்சம் புதுப்பித்திருக்கலாம்.

தஞ்சாவூர் பெரிய கோயில் என்பது கட்டுமானம் இல்லை, இது அடுக்குமானம் அடிப்படையிலான அமைப்பாகும். சிமென்ட் பயன்படுத்தப்படாமல் கட்டப்பட்ட கோயிலாகும். இக் கோயில், தாஜ்மகாலை விட அற்புதமானது, தனிச் சிறப்புபெற்றது. எனவே, இக் கோயிலைஉலக அதிசயங்கள் பட்டியலில் ஒன்றாக இடம்பெற ஆவண செய்யவேண்டும். நான் பணியாற்றியபோது ஒருங்கிணைந்த தஞ்சாவூர்மாவட்டமாக இருந்தது. அப்போது,திருவாரூருக்குச் சென்றேன். அங்குள்ள மனுநீதி சோழனின் சிலையையும், அவரது நிர்வாகத் திறனையும் கேள்விப்பட்டு அதிச யித்துப் போனேன்.

நான் இங்கு ஆட்சியராகப் பணியாற்றியபோதுதான் விவசாயிகளின் சிரமத்தை அரசுக்கு எடுத்துக் கூறி முதன் முறையாக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.10 ஊக்கத்தொகை பெற்றுத் தரப்பட்டது. 40 ஆண்டுகளுக்குப் பிறகுநடைபெறும் இந்த 3-வது குடமுழுக்கு விழாவில் பங்கேற்க எனக்கு மாமன்னன் ராஜராஜன் ஒரு வாய்ப்பளித்துள்ளார். இந்த விழாவில் எல்லோரும் பங்கேற்று மாமன்னன் ராஜராஜனைப் போற்றி புகழ்ந்தால் அந்த மாமன்னனின் ஆன்மா மகிழ்ச்சி அடையும்.

இவ்வாறு அவர் கூறினார். பெரிய கோயில் என்பது அடுக்குமானம் அடிப்படையிலான அமைப்பாகும். சிமென்ட் பயன்படுத்தப்படாமல் கட்டப்பட்ட கோயிலாகும்.


உலக அதிசயங்கள்டி.கங்கப்பாTanjore big templeமாவட்ட முன்னாள் ஆட்சியர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author