Published : 05 Feb 2020 07:03 AM
Last Updated : 05 Feb 2020 07:03 AM

தஞ்சை பெரிய கோயிலில் இன்று குடமுழுக்கு விழா; 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்: 4,500 போலீஸார் பாதுகாப்பு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று விமரிசையாக நடக்க உள்ளது. இதையொட்டி, கோயிலை சுற்றிப் பார்க்கவும், யாகசாலை பூஜையில் கலந்துகொள்ளவும் நேற்று பெரிய கோயில் வளாகம் முழுவதும் திரண்டிருந்த பக்தர்கள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவுக்கு 5 லட்சம் பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில், நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் மூன்றாவது முறையாக இன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் இந்தக் குடமுழுக்கு விழாவையொட்டி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய தொல்லியல் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், இந்து சமய அறநிலையத் துறை ஆகியவற்றின் சார்பில் கோயில் விமான கோபுரம் மற்றும் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நடராஜர், அம்மன், வராகி, கருவூரார் சன்னதிகளில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், விமான கோபுர கலசம் புதுப்பிக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டு பொருத்தப்பட்டது. புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

338 சுவாமி சிலைகள்

குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த டிசம்பர் 2-ம் தேதி திருப்பணிக்கான பாலாலயம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, கோயிலில் உள்ள பெருவுடையார், பெரியநாயகி அம்மன் சிலைகள் மற்றும் கோயிலில் உள்ள 12 விநாயகர் சிலைகள், 8 முருகன் சிலைகள், 252 சிவலிங்கத் திருமேனிகள், அம்பாள், ராகு, இந்திரன், ஈசானியன், நடராஜர் என 338 சுவாமி சிலைகளுக்கு மா காப்பு செய்ததுடன், அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, ஜனவரி 27-ம் தேதி குடமுழுக்கு விழாவுக்கான பூர்வாங்க பூஜையும், 31-ம் தேதி வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் இருந்து புனிதநீர் எடுத்து வரும் நிகழ்வும் நடைபெற்றன.

பின்னர், கடந்த 1-ம் தேதி கங்கை, யமுனை, காவிரி உள்ளிட்ட புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் உற்சவ மண்டபத்தில் இருந்து சிவாச்சாரியார்களால் யாகசாலை மண்டபத்துக்கு எடுத்து வரப்பட்டு, அன்று மாலை முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், நேற்று காலை 6-வது கால யாகசாலை பூஜையும், மாலையில் 7-வது கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.

யாகசாலை மண்டபத்தில் சுவாமி, அம்பாள், 41 உற்சவ மூர்த்திகள், 8 பலிபீடம், 10 நந்தி, 22 கோயில் கலசம் என 405 சுவாமிகளுக்கும் உரிய 705 கடங்கள் வேதிகைகளின் முன்பு வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு 8-வது கால யாகசாலை பூஜையும் தொடர்ந்து, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம் ஆகியவையும் நடைபெற உள்ளன. காலை 7.25 மணிக்கு யாகசாலை மண்டபத்திலிருந்து புனிதநீர் கடங்கள் புறப்பாடு நடைபெற உள்ளது.

காலை 9.30-க்கு குடமுழுக்கு

காலை 9.30 மணிக்கு விமானம் மற்றும் அனைத்து சன்னதிகளின் கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. பின்னர், காலை 10 மணிக்கு மகா தீபாராதனை, இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற உள்ளது.

கோயிலுக்குள் பக்தர்கள் வருவதற்காக 3 வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு வாயில் வழியாக விஐபிக்களும், பொதுமக்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் விஜபிக்களுக்கு 5 இடங்களும், பொதுமக்களுக்கு 7 இடங்களும் தேர்வு செய்யப்பட்டு தனித்தனியே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவர்கள் தரிசனம் முடித்துவிட்டு தெற்கு வாயிலின் மேற்குப் பகுதி வழியாக வெளியேற வேண்டும்.

விவிஐபிக்கள் சிவகங்கை பூங்கா, யாகசாலை பந்தல் வழியாக உள்ளே வந்து தரிசனம் செய்துவிட்டு மேற்கு வாயில் வழியாக வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

192 இடங்களில் சிசிடிவி

மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இன்று மட்டும் 5 லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் கூட்டத்தை முறைப்படுத்தவும் கோயில் மற்றும் வெளிப் பகுதிகளில் 192 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் 4,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேரலையில் ஒளிபரப்பு

குடமுழுக்கு விழாவின் அனைத்து நிகழ்வுகளும் நேற்று காலை முதல் உள்ளூர் தொலைக்காட்சிகள், யூ-டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பாகி வருகின்றன. இவற்றுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்துள்ளனர். மேலும், பொதிகை தொலைக்காட்சி குடமுழுக்கு விழாவை இன்று நேரலையில் ஒளிபரப்புகிறது.

ஒரே நாளில் ஒரு லட்சம் பக்தர்கள்

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடக்கும் யாகசாலை பூஜையில் பங்கேற்கவும், கோயிலைச் சுற்றிப் பார்க்கவும் வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர். கடந்த 2 நாட்களாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. பக்தர்களை முறைப்படுத்தி வரிசையில் அனுப்பியதாலும், பக்தர்கள் நகர்ந்துகொண்டே இருந்ததாலும் நெரிசல் தவிர்க்கப்பட்டது. கூட்டத்தை முறைப்படுத்தும் பணியில் என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.யாக சாலை பூஜை தொடக்க நாளான கடந்த 1-ம் தேதி மட்டும் 50,000 பக்தர்கள் வந்து சென்றனர். 2, 3 தேதிகளில் மொத்தம் 1.50 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர். நேற்று காலை முதல் பக்தர்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தனர். மாலையில் கூட்டம் மேலும் அதிகரித்தது. நேற்று ஒருநாளில் மட்டும் 1 லட்சம் பக்தர்கள் வந்து சென்றதாக போலீஸ் வட்டாரங்கள் கூறின.வெளியூர் பக்தர்கள் பலர் கோயிலுக்குள் நேற்று இரவே வந்து தங்குவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். இரவில் இங்கு தங்கக் கூடாது என்று கூறி அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.முதியவர்கள் வந்து செல்ல 10-க்கும் மேற்பட்ட பேட்டரி கார்கள் பயன்படுத்தப்பட்டன. மாற்றுத் திறளானிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x