

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, தடையை மீறி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டார். அவரது கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்பேடு முதல் தலைமைச் செயலகம் வரை 12 கிலோ மீட்டர் தூரம் வரை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் எனத் தேமுதிகவினர் அறிவித்திருந்தனர். 12,000 பேர் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என கூறியிருந்தனர்.
ஆனால், மனிதச் சங்கிலிக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்காத நிலையில் தடையை மீறி இப்போராட்டம் தொடங்கியது.
தடையை மீறி மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்வதற்காக போலீஸார் தயார் நிலையில் இருந்தனர்.
இதையடுத்து, கோயம்பேட்டில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விஜயகாந்தை போலீஸார் கைது செய்தனர். அப்போது போலீஸாருடன் தேமுதிக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தேமுதிக தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. இதனால் தேமுதிக தொண்டர்கள் சம்பவ இடத்தில் இருந்து விரைவாக ஓட முயற்சித்தனர். அவர்களையும் போலீஸ் விரட்டி அடித்தது.
பல்வேறு பகுதிகளில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேமுதிகவினர் கைது செய்யப்படடனர். சென்னை சென்ட்ரல், சேப்பாக்கம், கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, செய்தியாளர்களுக்காக பேட்டியளித்த விஜயகாந்த், "தமிழக மக்கள் நலனுக்காகவே இப்போராட்டத்தை நடத்துகிறோம். போராட்டத்துக்கு அனுமதி அளிக்காவிட்டால் எங்களை போலீஸார் கைது செய்யட்டும். எங்கள் மதுவிலக்கு போராட்டம் தீவிரமாகத் தொடரும்" என்றார்.
சென்னை சென்ட்ரல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கூறும்போது, "மதுவிலக்கு கோரி அறவழியில் நடத்தும் போராட்டத்தை அரசு முடக்குவது நியாயமற்றது" என்றார்.
மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த 5 நாட்களுக்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும், மேலும் 12 கி.மீ என்பது கூடுதல் தூரம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் விடுவிப்பு
கோயம்பேடு, அரும்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல், கோட்டை என பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் இரவு 8 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர்.
</p>