

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியில் பட்டியல் இன ஒதுக்கீட்டிற்கு மாறாக வேறு பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றுள்ளார் என்று எதிர்வேட்பாளர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது ஜி.கல்லுப்பட்டி. இந்த ஊராட்சித் தலைவர் பதவி பட்டியல் இன பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் சின்னத்தாய் என்பவர் மூக்குக் கண்ணாடி சின்னத்திலும், மகேஸ்வரி என்பவர் ஆட்டோ சின்னத்திலும் போட்டியிட்டனர்.
கடந்த மாதம் நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கையில் மகேஸ்வரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் மகேஸ்வரி பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஆவணங்களை மாற்றி கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இது இடஒதுக்கீட்டை பாதிக்கும் செயல் என்று சின்னத்தாய் தரப்பினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுத்தனர்.
இதற்கான ஆவணங்களையும் தேர்தல் அதிகாரிகளிடம் சமர்பித்துள்ளனர்.
இதனால் ஜி.கல்லுப்பட்டி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சின்னத்தாய் கூறுகையில், மகேஸ்வரி பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த குறவர் உப்பிலியர் என்ற பிரிவைச் சேர்ந்தவர் கடந்த 2016-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெரியசோமூர் என்ற ஊரில் சென்று தனது மகனுக்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்று சான்றிதழ் பெற்று வந்துள்ளார்.
அதை வைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் நேரத்தில் எங்களால் அதற்கான ஆவணங்களை சமர்பிக்க முடியவில்லை. தற்போது தேர்தல் அதிகாரிகளிடம் இவற்றை அளித்துள்ளோம் என்றார்.
தற்போதை ஊராட்சித் தலைவர் மகேஸ்வரி கூறுகையில், நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்தான். எனது அப்பா மற்றும் இதர உறவு சான்றிதழ்களைப் பார்த்தாலே தெரியும். தோல்வி அடைந்த விரக்தியில் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகின்றனர். தேர்தல் அதிகாரிகள் விசாரித்தாலும், நீதிமன்றத்திற்குச் சென்றாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்றார்.