

சென்னை மற்றும் புறநகர் மின்சார ரயில் நிலையங்களை கண்காணிக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக செல்கிறது. இங்கு பயணிகளிடமிருந்து செயின் பறிப்பு, பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். சில நேரங்களில் ஆயுதங்களைப் பயன்படுத்தி பயணிகளை மிரட்டியும் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. குறிப்பாக விரைவு ரயில்களில் இரவு நேரத்திலும், அதிகாலையிலும் அதிகமான குற்றங்கள் நடைபெறுகின்றன.
இது தொடர்பாக சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் என்.அழகர்சாமியிடம் கேட்டபோது, ‘‘சென்னை – விழுப்புரம், சென்னை – சூலூர்பேட்டை, சென்னை – ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மின்சார ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணியை தீவிரப்படுத்தி வருகிறோம். மேலும், அதிகமாக குற்றங்கள் நடக்கும் ரயில் பாதைகள், மின்சார ரயில் நிலையங்களிலும் தொடர்ந்து துப்பறியும் பணிகளை மேற்கொண்டு, குற்றவாளிகளை முன்கூட்டியே பிடிக்கவும் சிறப்பு குழுக்களை அமைத்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தலா 5 பேரும், ரயில்வே போலீஸை சேர்ந்த தலா ஒருவரும் இருப்பார்கள். கடந்த சில வாரமாக இந்த குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், சிறிய அளவிலான குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது’’ என்றார்.