

தனியார் பேருந்துகளின் உரிமையாளரின் பெயர் மற்றும் ஆதார் எண்ணை அந்தந்த பேருந்தின் முன் ஒட்டக் கோரிய வழக்கில் போக்குவரத்துத் துறை இயக்குநரை எதிர் மனுதாரராக சேர்க்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில் "தமிழகத்தில் தனியார் பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுகின்றன. இதனால் அரசுக்கு அதிகப் படியான வருவாய் இழப்பு ஏற்படுகிறது.மேலும் தற்போது தமிழக அரசு 1000 புதிய பேருந்துகளை ஈரோடு,நாமக்கல், கரூர்,சேலம் ஆகிய நகரங்களில் இயக்குகிறது.
ஆனால் அவை அனைத்து வழித் தடங்களிலும் செல்லாமல்,முக்கிய வழித் தடங்களில் மட்டும் இயக்கப்படுகிறது. இதனால் தனியார் பேருந்துகள் அதிக லாபம் ஈட்டுகிறது.
இதற்கு அரசு அதிகாரிகள் உடந்தையாகச் செயல்படுகிறார்கள். மேலும் தமிழக அரசின் புதிய பேருந்துகளை தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்க எவ்வித நடவடிக்கையம் எடுக்கவில்லை.
மேலும் தனியார் பேருந்துகளின் உரிமையாளரின் பெயர் மற்றும் ஆதார் எண்ணை அந்தந்த பேருந்தின் முன் ஒட்ட வேண்டும்.
இது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே மனுவின் அடிப்படையில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் துரைசுவாமி,ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவில் போக்குவரத்துத் துறை இயக்குநரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.