

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ஒருநபர் ஆணையம் முன்பாக ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த சம்மனில், நடிகர் ரஜினிகாந்த் வரும் 25-ம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி விசாரணை ஆணையம் முன்பாக நேரில் ஆஜராகி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அவருக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை 18 கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை நடந்த விசாரணையில் மொத்தம் 704 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு 445 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 630 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
18-வது கட்ட விசாரணையில் அதிகமாக ஒளிப்பதிவாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், செய்தியாளர்கள் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து போராட்டம் நடைபெற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு நபர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கிச்சூடு தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஒரு சிலக் குறியீடுகளை பேசியுள்ளதாக ஆணையத்தில் சாட்சிகளாக ஆஜரானவர்கள் வாக்குமூலம் அளித்திருந்ததாகத் தெரிகிறது. அது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளனராம். அதன் அடிப்படையிலேயே விசாரணைக்கு ஆஜராகும்படி ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.