Published : 04 Feb 2020 02:08 PM
Last Updated : 04 Feb 2020 02:08 PM

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு 

நடப்பு ஆண்டில் நடைபெறுவதாக இருந்த 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பு:

''5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக 13.9.2019 அன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.

அவற்றை ஜெயலலிதாவின் அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்''.

இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன்

பின்னணி:

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு, தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்றும் தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இதற்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்தன.

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்புவரை முப்பருவக் கல்வி முறை அமலில்உள்ளது. ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியே புத்தகங்கள் வழங்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு முப்பருவ பாடத்திட்ட அடிப்படையில் நடைபெற உள்ளது. இதனால் 3 பருவத்துக்குரிய புத்தகங்களையும் சேர்த்து படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

5, 8-ம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக பொதுத்தோ்வு எழுதவுள்ளதால் அவர்கள் சற்று அச்சத்துடன் உள்ளனர். இன்னும் 2 மாதமே உள்ளதால், இளம் குழந்தைகளை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துவது சிரமம் என்றும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x