Published : 04 Feb 2020 01:35 PM
Last Updated : 04 Feb 2020 01:35 PM

2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த ஆணையிடுக: மோடிக்கு ராமதாஸ் கடிதம் 

2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த தாங்கள் ஆணையிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக மோடிக்கு ராமதாஸ் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

''இந்தியா விடுதலை அடைந்த பிறகு இன்று வரை நிறைவேற்றப்படாமல் இருக்கும் சமூக நீதி சார்ந்த கோரிக்கை, அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய தேவை ஆகியவை குறித்த விவரங்களை பாரதப் பிரதமராகிய தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்.

உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பல வழிகளில் மாறுபட்ட நாடு ஆகும். பல்வேறு இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள், சமூக அடுக்குகளைக் கொண்ட நாடான இந்தியாவில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை முன்னேற்றுவதற்கு இட ஒதுக்கீடு எனும் சமூக நீதி வழங்க சாதிவாரியான மக்கள் தொகை மிகவும் அவசியம் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பிலிருந்தே இன்றைய மராட்டியத்திலும், தமிழ்நாட்டிலும் விரிவான இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டு வந்தன. தமிழ்நாட்டில் 1927-ம் ஆண்டில் தொடங்கி 1950-ம் ஆண்டு வரை 100% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு அடிப்படையாக அமைந்தது ஆங்கிலேயர் காலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புதான் என்பதை சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைவரும் ஒப்புக்கொள்வர்.

ஆனால், ஆங்கிலேயர் ஆட்சியில் 1931 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பிறகு, கடந்த 90 ஆண்டுகளாக இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. இதனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட விஷயங்களில் முழுமையான புள்ளிவிவரங்கள் கிடைக்காமல் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. காலப் போக்கில் இட ஒதுக்கீடு என்ற உன்னதமான தத்துவமே அழிக்கப்பட்டு விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை முன்னேற்றும் நோக்கத்துடன், 1990-ம் ஆண்டில் தொடங்கி இப்போது வரை பல்வேறு வகையான இட ஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதி மன்றங்களிலும் வழக்குகள் தொடரப்படும்போது, அவற்றை விசாரிக்கும் நீதிபதிகள் யதார்த்தத்தையோ, பயனடையும் சமுதாயங்களின் பின்தங்கிய நிலையையோ பார்ப்பதில்லை. மாறாக, இட ஒதுக்கீடு பெறும் சமுதாயத்தின் மக்கள்தொகை இட ஒதுக்கீட்டின் அளவுடன் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் உள்ளதா? என்பதை மட்டுமே பார்ப்பார்கள். அதை நிரூபிப்பதற்கு தேவையான புள்ளிவிவரங்களை தாக்கல் செய்ய முடியாவிட்டால் இட ஒதுக்கீடு செல்லாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து விடும்.

தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி இட ஒதுக்கீட்டின் அளவைத் தீர்மானிக்கும்படி நீதிபதிகளே ஆணையிட்டனர். ஆகவே, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால் அதற்கு தவிர்க்க முடியாத அடிப்படை சாதிவாரி மக்கள் கணக்கெடுப்புதான் என்பது எழுதப்படாத விதியாக ஆகிவிட்டது.

எனவே தான் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தியது. இதற்கான பணிகளை 2008-ம் ஆண்டிலேயே பாமக தொடங்கிவிட்டது. அதன் ஒருகட்டமாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 140 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டினோம். அவர்களின் கையெழுத்துகள் பெறப்பட்ட மனுவை அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பாமக இளைஞரணித் தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், அது தொடர்பான மனுவை 2008-ம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் நேரில் வழங்கினார். பின்னர் மக்களவையில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பப்பட்டபோது லாலு பிரசாத், சரத்யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவளித்தனர்.

அதைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த அரசு ஒப்புக்கொண்டது. மக்களவையில் இதுகுறித்த வாக்குறுதியை 2009-10 ஆம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்தார். அதன்பின் 2010-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தனியாகவும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தனியாகவும் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவ்வாறு செய்யாமல் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு என்ற பெயரில் எதற்கும் உதவாத சடங்கு ஒன்றை அப்போதைய மத்திய அரசு நடத்தி மக்களை ஏமாற்றியது. அப்போது நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் விவரங்களும் வெளியிடப்படவில்லை. அதனால், கணக்கெடுப்பு நடத்தப்பட்டதன் நோக்கமே சிதைந்தது.

2011-ம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக நீதி ஆர்வலர்களிடையே உள்ளது. அதை ஓரளவு ஏற்றுக்கொள்ளும் வகையில், 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் வகையில் நடத்தப்படும் என்று 2018-ம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். அவரது அறிவிப்பு அனைவரின் வரவேற்பையும் பெற்றது.

2018-ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவித்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கணக்கெடுப்புக்கும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, பட்டியலினம் மற்றும் பழங்குடியினரின் மக்கள்தொகை கணக்கெடுத்து அறிவிக்கப்படுகிறது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அவ்வாறு இருக்கும்போது அதேபோன்று அனைத்து சாதியினரின் மக்கள்தொகையும் ஏன் கணக்கிடப்படக்கூடாது? இது மிகப்பெரிய பணியும் இல்லை. கணக்கெடுப்பு ஆவணத்தில் பிற பிற்படுத்தப்பட்டவர் என்று குறிப்பிடும் பகுதியில் அவரது சாதியையும் சேர்த்துக் குறிப்பிட்டால் போதுமானது. இந்தியாவில் பின்தங்கிய மக்களை முன்னேற்ற இட ஒதுக்கீடு தான் சிறந்த ஆயுதம் எனும் சூழலில், அந்த ஆயுதத்தை செம்மையாக பயன்படுத்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி புள்ளிவிவரத் தொகுப்பை உருவாக்குவது அவசியம்.

அதை உணர்ந்ததால் தான், ஜனவரி 8-ம் தேதி மராட்டிய சட்டப்பேரவையிலும், 11-ம் தேதி ஒடிசா அமைச்சரவைக் கூட்டத்திலும் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஹரியாணா, அஸ்ஸாம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பான்மை மாநிலங்களில் இருந்தும், முக்கியமான கட்சித் தலைவர்களிடமிருந்தும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான கோரிக்கை எழுந்துள்ளது. அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த தாங்கள் ஆணையிட வேண்டும். அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் அரசு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x