

சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள இலைகள் படத்தை மறைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோர அதிமுகவுக்கு உரிமை இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசு போக்குவரத்துக் கழக சிறிய பஸ்களில் வரையப்பட்டு இருக்கும் இலைகள் படங்கள், அதிமுகவின் சின்னமான இரட்டை இலைபோல இருப்பதால் அதை மறைக்க தேர்தல் ஆணை யத்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, சிறிய பஸ்களில் உள்ள இலைகள் படத்தை மறைக்க நட வடிக்கை எடுத்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளரும் முதல் வருமான ஜெயலலிதா உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
‘சிறிய பஸ்களில் உள்ளது இரட்டைஇலை சின்னமே அல்ல. சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலி யுறுத்தும் பசுமையின் அடை யாளமாக நான்கு இலைகள் வரையப்பட்டுள்ளன.
எங்கள் கருத்தைக் கேட் காமலேயே இலைகளின் படங்களை மறைக்க தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக உத்தரவிட்டது சட்டவிரோதமானது’ என மனுவில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரை கொண்ட முதன்மை அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமாரசாமி, ‘‘அதிமுகவின் கருத்தை கேட்காமல் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக உத்தரவிட்டது தவறு. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.
‘‘இரட்டை இலையைப் போன்றே சிறிய பஸ்களில் உள்ள இலைகள் இருப்பதால் அதை மறைக்க வேண்டும் என்று ஒரு அரசியல் கட்சி கோரும்போது, அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை தமிழக அரசு சார்பில் எதிர்க்கலாம்.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதிமுகவுக்கு உரிமை இல்லை’’ என்று தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை ஆஜரானார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவுடன் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவும் இதே விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவும் சேர்த்து அன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.