கேரளாவில் கரோனா வைரஸ்: தமிழக எல்லையில் மருத்துவக்குழுவினர் முகாம் அமைத்து 24 மணி நேரமும் பரிசோதனை

கேரளாவில் கரோனா வைரஸ்: தமிழக எல்லையில் மருத்துவக்குழுவினர் முகாம் அமைத்து 24 மணி நேரமும் பரிசோதனை
Updated on
1 min read

கேரளாவில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக எல்லையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சுழற்சி முறையில் மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர்.

சீனாவில் உருவாகிய கரோனா வைரஸ் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 7ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இக்கிருமியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தும்மல் மூலம் எளிதில் பரவுவதால் இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கேரளா மாநிலத்தில் மூன்று பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மருத்துவ அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பிரச்னைக்குப்பிறகு கேரளாவிற்கு 1,500க்கும் மேற்பட்டோர் சீனாவில் இருந்து திரும்பி உள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் இது குறித்த பாதிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் தேனி கேரளா மாநில எல்லையில் இருப்பதால் அங்கிருந்து நோய் தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காக தமிழக நுழைவு வாயில் பகுதியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்காக லோயர்கேம்ப், கம்பம்மெட்டு, போடிமெட்டு உள்ளிட்ட தமிழக எல்லைப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

கம்பம்மெட்டு மருத்துவ முகாமில் புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் அர்ச்சனா தலைமையில் டாக்டர் முருகானந்தம், டாக்டர் சிராஜுதீன் ஆகியோரும் லோயர் கேம்ப் முகாமில் நடமாடும் மருத்துவ குழு டாக்டர் வின்ஸ்டன் தலைமையிலான குழுவினரும் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுடன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட பலரும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் கேரளாவிலிருந்து வாகனங்களில் வருபவர்களிடம் காய்ச்சல் உள்ளதா என்பது குறித்த சோதனைகளை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் அர்ச்சனா கூறுகையில், இந்நோயாளிகள் இருமினாலும் தும்மினாலும் அதன்மூலமாக வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் முதலில் நுரையீரலைத் தாக்கி பின்பு மரணத்தை ஏற்படுத்தும்.

இந்த சிறப்பு மருத்துவ முகாம் சுமார் 90 நாட்கள் செயல்படும், சுழற்சி முறையில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள் பணியில் இருப்பார்கள் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in