

எல்.ஐ.சி. பங்கு விற்பனை விவகாரத்தில் மத்திய அரசின் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
2020-21 பட்ஜெட் குறித்த ஆய்வு சென்னை தியாகராயநகரில் நடைபெற்றது, அப்போது பேசிய ப.சிதம்பரம், எல்.ஐ.சி.யைப் பொறுத்தவரை லாபகரமாகச் செயல்படும் நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை விற்க மத்திய அரசு எடுத்த முடிவின் பின்னணியில் உள்ள தெளிவான காரணங்களை மத்திய அரசு விளக்க வெண்டும் என்றார் ப.சிதம்பரம்.
“நடப்பு நிதியாண்டின் பட்ஜெ மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்ற சிதம்பரம் அடுத்த ஆண்டு ஜிடிபி வளர்ச்சி 6% முதல் 6.5% வரையில்தான் இருக்கும் என்று பொருளாதார ஆலோசகர் ஜனவரி 31ம் தேதி தெரிவிக்கிறார், ஆனால் அடுத்த நாளே ஜிடிபி வளர்ச்சி 10% இருக்கும் என்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த இரண்டு முரண்பட்ட எண்ணிக்கைகள் எப்படி சேர்ந்திருக்க முடியும்? நாங்கள் தரவுகளைப் பார்த்தோம் 1970லிருந்து ஜிடிபி கணிப்புக்கும் உண்மையான ஜிடிபிக்கும் உள்ள வித்தியாசம் சராசரியாக 5%.
ஆகவே அடுத்த ஆண்டு 10% ஜிடிபியை எட்ட முடியாது. முதலில் தேவையை அதிகரிக்கச் செய்ய மக்கள் கையில் பணப்புழக்கத்தையல்லவா நிர்மலா சீதாராமன் உறுதி செய்திருக்க வேண்டும்.
பெரிய அளவில் நுகர்வு மட்டுமே தேவை என்பதை நிலைப்படுத்த முடியும். பொருளாதாரம் சிக்கலில் உள்ளது இதனைச் சரிசெய்ய பெரிய அறுவை சிகிச்சைத் தேவைப்படுகிறது.
பொருளாதாரம் என்பது தேவை அதிகரிப்புத் தொடர்பானது, முதலீடு தொடர்பானது என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை. கடந்த 6 காலாண்டுகளாக பொருளாதாரம் சரிவு கண்டு வந்துள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி உட்பட பொருளாதாரத்தின் முக்கிய குறியீடுகள் எதிர்மறையாகக் காட்டுகின்றன.
ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் அடுத்த காலாண்டில் சரியாகி விடும் என்றே மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால் அப்படி நடக்கவில்லை.
2019-20 விரயம் செய்யப்பட்ட ஆண்டு, அதே போல் 2020-21ம் விரயம் செய்யப்படும் என்றே நான் அஞ்சுகிறேன்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விவாதத்துக்குப் பிறகு அவர்கள் மாற்றங்களை கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். பொருளாதாரத்தை மேம்படுத்த எங்களது பயனுள்ள ஆலோசனைகளை அவர்கள் எடுத்துக் கொண்டு முதலில் குறைந்தது 6% வளர்ச்சியையாவது உறுதி செய்ய வேண்டும் பிறகு 7% நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும்” என்றார் ப.சிதம்பரம்.