

சீனாவில் இருந்து நீடாமங்கலத்துக்கு வந்துள்ள புரோட்டா மாஸ்டர் ஒருவர் உடல் நலக் குறைவால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு வார்டில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
சீனாவில் கரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் படிப்பு, வேலைக்காக இந்தியாவில் இருந்து அங்கு சென்றவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வந்தவண்ணம் உள்ளனர். அவ்வாறுவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா பாதிப்பு இருந்தால் சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதன்மை மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சீனாவில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்த திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டர் ஒருவர் கடந்த ஜன.31-ம் தேதி சொந்த ஊருக்குத் திரும்பினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவுஅவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள ஆரம்பசுகாதார நிலையத்துக்கு சிகிச்சைபெறச் சென்ற அவர், சீனாவில் இருந்து வந்தவர் என்ற தகவல்தெரியவந்ததும், அங்கிருந்த மருத்துவர்கள் உடனடியாக அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குஅவர் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் கூறியதாவது: சீனாவிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியுள்ள நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர், பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவருடைய ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, கிண்டியில் உள்ள ரத்தப் பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இவர், 30 நாட்களுக்கு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றார்.
ஜிப்மரில் ஒருவர் அனுமதி
இதேபோன்று, புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர்சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்போது அங்கு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், புதுச்சேரி திரும்பினார். அவர் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.