Published : 04 Feb 2020 08:10 AM
Last Updated : 04 Feb 2020 08:10 AM

குடியுரிமை சட்டத்தை ஆதரிப்போர் மீது தாக்குதல்; தமிழகத்தை கலவர பகுதியாக மாற்றும் முயற்சியை உடனே தடுக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமியிடம் பாஜக நிர்வாகிகள் நேரில் கோரிக்கை

குடியுரிமை சட்டத்தை ஆதரிப்போரை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகத்தை கலவர பகுதியாக மாற்றும் முயற்சியைத் தடுக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமியிடம் தமிழக பாஜக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

குடியுரிமை சட்டத்தை ஆதரிப்போர் மீது பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படுவது, படுகொலை செய்யப்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை, பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் நேற்று சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.நரேந்திரன் கூறியதாவது:

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பாஜக மகளிர் அணி தலைவி துண்டு பிரசுரம் கொடுத்தபோது, அவரைத் தாக்கியுள்ளனர்.

காவல் துறையில் புகார் அளித்தபோது எங்கள் மீதே வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை ரிச்சி தெருவில் உள்ள வணிக வளாகத்தில் வாலிபர் ஒருவர் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பேனா வழங்கியபோது, மாற்று மதத்தினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்தபோது, ஆயிரக்கணக்கானவர்கள் கூடி, சம்பந்தப்பட்டவரை கைது செய்ய விடாமல் தடுத்துள்ளனர். அது மட்டுமின்றி ஓட்டேரியைச் சேர்ந்த உருது கமால்என்ற பொறுப்பாளர் துண்டு பிரசுரம் கொடுக்கும்போது தடுக்கப்பட்டுள்ளார்.

திருச்சியில் விஜயரகு படுகொலை சம்பவம் சொந்த காரணம்என்று கூறப்படுகிறது. இருப்பினும் ‘லவ் ஜிகாத்’ என்பதன் காரணமாகத்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பதாகப் பார்க்கிறோம். அவரும் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

துணை முதல்வரின் மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க வேண்டும். குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும். தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதை மாற்றி, கலவர பகுதியாக மாற்றும் முயற்சி நடைபெறுகிறது.

இதைத் தடுக்கும் வகையில், முதல்வரை சந்தித்து மனு அளித்துள்ளோம். முதல்வர் உடனடியாக கவனிப்பதாக தெரிவித்துள்ளார். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x