

தற்போதைய சூழலில் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு மக்களுக்கு உடனடியாகப் பணம் கிடைக்கும் திட்டங்களை அரசுநிறைவேற்ற வேண்டும் என்றுமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் யோசனை தெரிவித்தார்.
தென்னிந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை (சிக்கி) சார்பில் மத்திய நிதிநிலை அறிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசியதாவது:
இந்தியப் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருப்பதற்கு, பொருட்களை யாரும் வாங்காததும், யாரும் முதலீடு செய்ய முன்வராததுமே காரணம். இதை சரி செய்வதற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்படவில்லை. அரசு செலவி னம், தனியார் முதலீடு, தனியார் நுகர்வு, ஏற்றுமதி ஆகியவற்றின் மூலமாகத்தான் தேவையை அதிகரிக்க முடியும்.
நீண்டகாலத் திட்டம், குறுகிய காலத் திட்டம் என 2 வகையான திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலமாக அரசு செலவினத்தை அதிகரிக்கலாம். விமான நிலையம் கட்டுவதற்கு 3 ஆண்டுகள் வரை ஆகும். அதுவே, மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கினால், இத்திட்டங்களின் மூலம் மக்களுக்கு உடனடியாக பணம் கிடைக்கும்.
ஓரளவு வசதியானவர்களுக்கு ரூ.1 லட்சம் கிடைத்தால் அதில் ரூ.20 ஆயிரத்தை செலவு செய்துவிட்டு, ரூ.80 ஆயிரத்தை சேமிப்பார்கள். அதுவே கிராமப்புற மக்களுக்கு ரூ.300 கிடைத்தால் அதை உணவு, மருந்து போன்றவற்றுக்கு உடனடியாக செலவு செய்வார்கள். அதன்மூலம் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும்.
தனியார் நிறுவனங்கள் தயக்கம்
விசாரணை அமைப்புகளான வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ போன்றவற்றுக்கு அதிக அதிகாரம் கொடுத்திருப்பதால் தனியார் சொத்துகளை கையகப்படுத்துவது போன்ற கடும் நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். அதனால் அரசு மீது தனியார் துறையினருக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. சில தனியார் துறையினர் தவறு செய்துவிட்டார்கள் என்பதற்காக அனைவர் மீதும் சந்தேகப்பட்டு நடவடிக்கை எடுத்தால், தனியார் துறையினர் முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள்.
மேலும் சுங்க வரியை அதிகரித்ததால் ஏற்றுமதி பாதித்துள்ளது. தற்போதைய பொருளாதாரச்சூழலில் ஏற்றுமதிக்கான மானியத்தை அதிகரிக்க வேண்டும்.அதன்மூலம் ஏற்றுமதியை ஊக்குவித்து, ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். மொத்தத்தில், கடந்த ஆண்டு, இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கைகள் இரண்டுமே பயனற்றவைதான்.
பொதுத்துறை பங்குகள் விற்பனை
பொதுத்துறையின் பங்குகள் விற்பதை ஆதரிக்கிறேன். அதேநேரத்தில் எல்ஐசி.யின் பங்குகள் விற்பனை குறித்து எங்கள் கட்சி எந்த முடிவும் எடுக்கவில்லை. மேலும், நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை வெறுமனே நிதி திரட்டுவதற்காக மட்டும் அதன் பங்குகளை விற்பதுஏற்புடையதல்ல. ஏர் இந்தியா, பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை விற்பது அவ்வளவு சுலபமல்ல.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
முன்னதாக, சிக்கி தலைவர் ஆர்.கணபதி வரவேற்றார். நிறைவில், சிக்கி உறுப்பினர் எம்.முரளிதரன் நன்றி கூறினார்.