

ஹஜ் பயணிகளுக்கு உதவ தன்னார்வலர்களாக செல்ல விரும்பும் அரசு அல்லது அரசு உதவி பெறும் நிறுவன ஊழியர்கள் பிப்.24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மற்றும் இதர மாநில ஹஜ் குழுக்கள் மூலம் புனித ஹஜ்பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா செல்லும் புனித பயணிகளுக்கு உதவிசெய்ய ஹஜ் தன்னார்வ தொண்டர்களை இந்திய ஹஜ் குழு அனுப்புவது வழக்கம்.
இந்த ஆண்டு மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு, ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கையை ‘www.hajcommittee.gov.in’ என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது. ஹஜ் தன்னார்வ தொண்டராக செல்ல விரும்பும் தகுதியுள்ள நிரந்தர அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவன ஊழியர்கள் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தங்களின் துறைத்தலைவர் மூலம் உரிய வழியில் அனைத்து ஆவண நகல்களுடன் ‘செயலர் மற்றும் செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு,ரோசி டவர், 3-ம் தளம், எண்.13. மகாத்மா காந்தி சாலை, சென்னை 600034’ என்ற முகவரியில் வரும் பிப்.24ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.