

சென்னை மாநகராட்சி சார்பில் அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பெருந்தலைவர் காமராஜ் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கை கழுவும் பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது.
‘முறையாகக் கை கழுவுவதன் மூலம் தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்கலாம்’ என்று உலக சுகாதார நிறுவனம் கூறி வருகிறது. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவுவதையும், முறையாக கை கழுவுவதன் மூலம் 80 சதவீதம் வரை தடுக்க முடியும் என்று சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில், பள்ளி மாணவிகளுக்கு கை கழுவும் பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி, அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பெருந்தலைவர் காமராஜ் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் பங்கேற்று, முறையாக கை கழுவும் விதம் குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். அதன் நன்மைகள் குறித்தும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் விளக்கினார்.
அம்பத்தூர் மண்டல அலுவலர் ஜி.தமிழ்ச்செல்வன், பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஜி.தங்கராஜ், சுற்றுச்சூழல் மன்ற மாநில உதவி இயக்குநர் ஜி.ஆர்.ராஜசேகர், பள்ளி தலைமையாசிரியை எஸ்.வனிதா ராணி உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.