

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் இந்து ஆன்மிகமற்றும் சேவை மையம், பண்பு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளை இணைந்து நடத்திய 11-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. 29-ம் தேதி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். 400-க்கும்மேற்பட்ட அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அனைத்து தரப்பு மக்களின் குடும்பம், ஆரோக்கியம், செல்வம் உள்ளிட்டவை செழிக்க வேள்விகள், தெருக்கூத்துகள், நாடகங்கள், வில்லிப்புத்தூர் ஆண்டாள் கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்றன.
நிறைவு நாளான நேற்று காலை 9 மணி முதல் ஏராளமானோர் கண்காட்சியை காண வந்தனர். அனைவரும் அரங்குகளை சுற்றி பார்த்து ஆன்மிக தகவல்களைக் கேட்டறிந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை நாட்டுக்காக உயிர் துறந்த ராணுவவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பழங்காலத்தில் இந்திய நாடுஎப்படி இருந்தது, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எப்படி இருந்தது, தற்காலத்தில் வ.உ.சி, பகத்சிங் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் வந்து பார்ப்பது போலசித்தரிக்கப்பட்ட நாடகம் பள்ளிமாணவர்களால் அரங்கேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நாட்டுக்காக வீர மரணம் அடைந்த பரம் வீர் சக்ரா விருது பெற்ற மேஜர் சோம்நாத் சர்மா, ஜாதுநாத் சிங் உள்ளிட்ட 21 ராணுவ வீரர்களுக்கு மாணவ, மாணவியர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், விமானப் படைவீரர் அபிநந்தனின் தந்தை ஏர்மார்ஷல் வர்தமான், முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் கோபால் சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும், நேற்று மாலை ஏ.எம்.ஜெயின் கல்லூரி மாணவியர் வழங்கிய, வேலுநாச்சியாரின் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நாட்டிய நாடகம் நடைபெற்றது.
கண்காட்சியின் நிறைவு நிகழ்ச்சியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 6 மணியளவில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்கல்யாண உற்சவத்தில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாமசங்கீர்த்தனம், விஸ்வசேன ஆராதனம், புண்ணியாகவாசனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. அவ்வப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ‘கோவிந்தா கோவிந்தா’ என்று முழக்கமிட்டனர். நிறைவு நாளானநேற்று 2 லட்சம் பேர் கண்காட்சியை பார்வையிட்டனர்.
இதுகுறித்து, பண்பு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ராஜலட்சுமி கூறும்போது, “ஜன. 29-ம் தேதி தொடங்கி கண்காட்சி நடைபெற்ற 6 நாட்களில் 18 லட்சம் பேர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். கண்காட்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது" என்றார்.