5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சி பாதிக்காது: பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் உறுதி

சிஜி தாமஸ் வைத்தியன்
சிஜி தாமஸ் வைத்தியன்
Updated on
2 min read

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 ஆண்டுகளுக்கு எந்தமாணவரின் தேர்ச்சியும் நிறுத்திவைக்கப்படாது என்றும் பொதுத்தேர்வு குறித்து மாணவர்களும், பெற்றோரும் அச்சப்பட வேண்டாம் எனவும் பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் உறுதி தெரிவித்துள்ளார்.

தற்போது 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டு(2019-2020) முதல் பொதுத்தேர்வுநடத்தப்படும் என அரசு தேர்வுத் துறை அறிவித்து அதற்கான முன்னேற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள்என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுத்தேர்வு நடத்தினால் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் அதிகரிக்கும். எனவே,பொதுத்தேர்வு நடத்துவதைக் கைவிட வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பள்ளிக் கல்விஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை கடந்த 2012-2013-ம் கல்வி ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இம்முறையில், வளரறிமதிப்பீட்டுக்கு (Formative Assesment) 40 மதிப்பெண்ணும், தொகுத்தறி மதிப்பீட்டுக்கு (summative Assesment) 60 மதிப்பெண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வளரறி மதிப்பீட்டில் 2 வகைகளில் மதிப்பீடு செய்யப்படுகிறது. முதல்வகையில்புராஜெக்ட், மாதிரி வடிவமைத்தல் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு 20 மதிப்பெண் வழங்கப்படுகிறது. அதேபோல், 2-வது வகையில், ஒவ்வொரு பாடத்திலும் சிறுசிறு தேர்வுகள் நடத்தப்பட்டு அவற்றுக்கு 20 மதிப்பெண் அதே பள்ளி ஆசிரியர்களால் வழங்கப்படுகிறது.

தொகுத்தறி மதிப்பீட்டில் பாடப்பகுதியில் உள்ள பாடக் கருத்துகளில் மாணவர்களின் கற்றல் விளைவுகளை மதிப்பீடு செய்ய பள்ளி அளவிலோ, வட்டார அளவிலோ அல்லது மாவட்ட அளவிலோ வினாத்தாள் தயாரிக்கப்பட்டு 60 மதிப்பெண்களுக்கு தேர்வுகள்நடத்தி மதிப்பெண் வழங்கப்படு கிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வுக்கு (பொதுத்தேர்வு) வளரறி மதிப்பீட்டின் 2 வகைகளுக்கு 40 மதிப்பெண்களுக்கு பள்ளி பாட ஆசிரியர்களால் வழங்கப்பட்ட மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தொகுத்தறி மதிப்பீட்டில் சீரானமுறையில் வினாத்தாள் தயாரிக்கவேண்டியுள்ளது. வினாத்தாளின் தரத்தை மேம்படுத்துதல், மாணவர்களை மதிப்பீடு செய்வதில்சீரான, நியாயமான முறைகளைநடைமுறைப்படுத்துதல் போன்ற வற்றால் 60 மதிப்பெண்ணுக்குரிய பகுதிகளுக்கு அரசு தேர்வுத் துறையால் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மூலம்வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் வாயிலாக பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும்.

விடைத்தாள்கள் அந்தந்த குறுவட்டார மைய அளவில் உள்ளபிற பள்ளிகளுக்கு மாற்றிக் கொடுத்து திருத்தம் செய்து மதிப்பெண் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்படும். மேலும், 5 மற்றும் 8-ம் வகுப்புபொதுத்தேர்வு அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்கவேண்டாம் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in