Last Updated : 03 Feb, 2020 05:52 PM

 

Published : 03 Feb 2020 05:52 PM
Last Updated : 03 Feb 2020 05:52 PM

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு உத்தரவை ரத்து செய்யக் கோரி நெல்லை ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலியில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு உத்தரவை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் மனு அளிக்கப்பட்டது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி இந்திய தேசிய லீக் கட்சியினர் அளித்த மனுவில், "நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. பொதுத்தேர்வு என்ற வார்த்தையின் பொருள்கூட தெரியாத பருவத்தில் அவர்கள் மீது பொதுத்தேர்வு என்ற பாரம் திணிக்கப்பட்டிருக்கிறது. இதானால் சிறுவர், சிறுமியரும், அவர்களது பெற்றோரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அனைவருக்கும் கல்வி உரிமை கிடைக்க வேண்டும் என்ற கொள்கைக்கு எதிராக இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு உத்தரவை பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது" எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், திருநெல்வேலி மாநகராட்சி 55-வது வார்டுக்கு உட்பட்ட நதிபுரம் பகுதி மக்கள் குடிநீர் கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி 55-வது வார்டுக்கு உட்பட்ட நதிபுரம் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் ஊரில் ஆற்று குடிநீர் குழாய் பல மாதங்களாக பழுதடைந்துள்ளது. எனவே தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் இங்குள்ள பெண்கள் தண்ணீருக்காக 3 கி.மீ. தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்துவர வேண்டியுள்ளது. மேலும் இப்பகுதியிலுள்ள அடிபம்புகளும் பழுதடைந்துள்ளன. பொது கழிப்பிடத்திலும் தண்ணீரில் இல்லாமல் பெரும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்த முடியவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே சேதமைடந்த குடிநீர் குழாய்களை சரிசெய்யவும், அடிபம்புகளையும், பொது கழிப்பிடத்தையும் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி தச்சநல்லூர் நியூகாலனி, மேலக்கரை பைபாஸ் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனு:

திருநெல்வேலி சத்திரம் புதுக்குளம் கிராமம், தச்சநல்லூர் வார்டு எண்-2, பைபாஸ் மற்றும் மேலக்கரை, நியூ காலனி பகுதிகளில் பலதரப்பட்ட மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். இப்பகுதி திருநெல்வேலி- மதுரை தேசிய நெடுஞ்சாலை, ரவுண்டானா பகுதிகளுக்கு அருகிலுள்ளது. புறநகர் பேருந்துகளும், நகர்ப்புற பேருந்துகளும் இங்குவந்து ஆட்களை ஏற்றி செல்கின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் ஏற்கெனவே இருந்த மதுக்கடையால் இப்பகுதி மக்கள் அனுபவித்த துன்பம் ஏராளம். இந்நிலையில் தற்போது புதிதாக சாலையின் கீழ்ப்பகுதியில் மதுகடை அமைக்க நடவடிக்கை எடு்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது இப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மதுக்கடையை வேறு ஒதுக்குபுறமான இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் அளித்த மனு:

திருப்பணிகரிசல்குளம் பகுதியில் விவசாயிகள் 700 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளனர். இந்த கிராமத்தை சுற்றி பக்கத்துக்கு கிராமங்களிலும் பலநூறு ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டிருக்கிறது. ஆனால் இப்பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் மிக குறைந்த விலைக்கு நெல் விற்பனை செய்ய வேண்டிய நிலையுள்ளது. எனவே இப்பகுதியில் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x