

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு நேற்று வழக்கை விசாரித்தபோது, சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த நித்தியானந்தம் (65) என்பவர் ஆஜராகி தனக்கு ஆங்கிலம் பேசத்தெரியாது. எனவே, தமிழில் வாதிடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு தலைமை நீதிபதி கவுல் அனுமதி அளித்தார். அதையடுத்து நீதிபதி சிவஞானம் அந்த முதியவரிடம் விவரம் கேட்டறிந்தார். அப்போது அந்த முதியவர் தமிழில் வாதாடிய விவரம்:-
தனியார் நிறுவனம் ஒன்றில் 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றினேன். பணப் பலன்களைக் கொடுக்காத அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தேன். இவ்வழக்கில் சமரசம் செய்து கொள்வதாக நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் சொல்லி வேண்டுமென்றே வழக்கை இழுத்தடிக்கிறது. எனக்கு விரைவில் நிவாரணம் பெற்றுத் தாருங்கள் என்று கீழமை நீதிமன்ற நீதிபதியிடம் கோரியும் பலனில்லை. அந்த நிறுவனத்திடம் இருந்து விளக்கமும் கேட்டு பெறப்படவில்லை. எனவே, எனக்கான பணப்பலன்களை அந்த நிறுவனம் விரைவில் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த முதியவர் கேட்டுக்கொண்டார்.
இந்த விவரங்களை நீதிபதி சிவஞானம், தலைமை நீதிபதியிடம் ஆங்கிலத்தில் எடுத்துரைத்தார். அதைத்தொடர்ந்து, முதியவர் தமிழில் விரிவாக எழுதி வைத்திருந்த வழக்கு விவரங்களைப் பெற்றுக் கொண்ட நீதிபதிகள், இவ்வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று முதியவரிடம் கூறினர்.