

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுஹான் நகரை மையமாக வைத்து பரவி வரும் கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 20 நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸுக்கு 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சீனாவில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர், கடந்த 1-ம் தேதி விமானம் மூலம் சென்னை வந்த நிலையில், நேற்று விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை தனி வார்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தகவல் வெளியானது.
இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் குந்தவை தேவி இன்று (பிப்.3) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தமிழகத்தில் கரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை. கடந்த வாரம் முதல் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதற்கென தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை.
செய்ய வேண்டியதை, செய்யக் கூடாததை பொதுமக்கள் கடைப்பிடித்தால் இதனைக் கட்டுப்படுத்தலாம். தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி, சீனாவின் யுவானிலிருந்து 2,000 கி.மீ. தூரத்தில் மருத்துவம் படித்து வந்தார். அவர் வீட்டுக்குச் சென்று அறிவுரை சொன்னோம். அவரது குடும்பத்தினர் பயந்ததால் விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது காய்ச்சல் இல்லை.
மேலும், தற்போது கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட்டில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யலாம். சீனாவில் படித்தவர்கள், வேலைக்குச் சென்றவர்கள் என விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 14 பேர் வீட்டில் உள்ளனர். அவர்களை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் வீட்டுக்கு 28 நாட்கள் மருத்துவத் துறை சென்று தொடர்ந்து கண்காணிக்கும். அவர்களுக்குத் தற்போது வரை எந்த பாதிப்பும் இல்லை" எனக் கூறினார்.