Published : 03 Feb 2020 02:22 PM
Last Updated : 03 Feb 2020 02:22 PM

கரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள 10 வழிமுறைகள்: திவ்யா சத்யராஜ் பட்டியல்

கரோனா வைரஸிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள கையாள வேண்டிய 10 வழிகளை ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காய்ச்சல் சீனாவைத் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் இருந்து கேரள மாநிலம் வந்த 2 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த வைரஸ் காற்றில் கலந்து அதிகமாகப் பரவுவதால், தங்களைப் பாதுகாக்க பலரும் முகக்கவசம் அணிந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கையாள வேண்டிய வழிமுறைகளைக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

1) இறைச்சிகளுக்கும், சமைத்த உணவுகளுக்கும் வெவ்வேறு வெட்டும் பலகைகளையும், கத்திகளையும் பயன்படுத்துங்கள்.

2) சமைத்த உணவுகளையும், இறைச்சியையும் கையாளும்போது கைகளை நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.

3) நன்கு சமைத்த உணவுகளையே உண்ணுங்கள்.

4) ஒருமுறை பயன்படுத்தும் முகக்கவசங்களை பயன்பாட்டுக்குப் பிறகு உடனடியாக அப்புறப்படுத்திவிடவும். அப்புறப்படுத்தியதும் கைகளை நன்கு கழுவி விடவும்.

5) இருமல் மற்றும் காய்ச்சல் இருப்பவர்களோடு நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்கவும்.

6) அழுக்கான ஆடைகள் மற்றும் காலணிகளை குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலக்கவும்.

7) நோய்வாய்ப்பட்ட விலங்குகளிடமிருந்தும், கெட்டுப்போன மாமிசங்களிடமிருந்தும் விலகியிருக்கவும்.

8) குறிப்பாக விலங்குகளையும், விலங்குகளின் பொருட்களையும் தொட்ட பிறகு அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவுங்கள்.

9) இருமலோ, காய்ச்சலோ இருந்தால் பயணத்தைத் தவிர்க்கவும்.

10) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி உணவுகளை அதிகம் உண்ணுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x