Published : 03 Feb 2020 12:28 PM
Last Updated : 03 Feb 2020 12:28 PM

சேலம், நாமக்கல் மாவட்ட திமுக செயலாளர்கள் மாற்றம்: வீரபாண்டி ராஜா விடுவிப்பு; செல்வகணபதி நியமனம்

கடந்த வாரம் திருச்சி திமுக மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு விடுவிக்கப்பட்டு மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மகேஷ் அன்பில் பொய்யாமொழி உள்ளிட்ட 2 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நிலையில், சேலம், நாமக்கல் மாவட்ட திமுக செயலாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

திமுகவிற்குள் அதிரடி மாற்றங்கள் கடந்த ஒருவாரமாக நடந்து வருகிறது. கட்சித் தலைமைப் பதவிக்கு தேவை என சில மாவட்டச் செயலாளர்கள் மாநிலத் தலைமைக்கு மாற்றப்பட்டு அந்த இடத்தில் புதிய மாவட்டப் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மக்களவைத்தேர்தலிலும், ஊரக உள்ளாட்சித்தேர்தலில் பெரிய அளவில் திமுக அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த மாவட்டம் திருச்சி. அதன் மாவட்டச்செயலாளர் கே.என்.நேரு. முன்னாள் அமைச்சரான இவர் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ளார். இந்நிலையில் அவர் கட்சியில் மாநிலத் தலைமைக்கு மாற்றப்பட்டு தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

திருச்சி மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மகேஷ் அன்பில் பொய்யாமொழி, வைரமணி பொறுப்பாளராகவும், ஏற்கெனவே செயலாளராக இருக்கும் காடுவெட்டி தியாகராஜன் ஒரு மாவட்டத்துக்குச் செயலாளராகவும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றங்கள் திருச்சியில் திமுகவை பலவீனப்படுத்தும் என ஒரு சாரரும், பலப்படுத்தும் என ஒரு சாரரும் விமர்சிக்கும் நிலையில் சேலத்திலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் வலுவாக இருக்கும் வீரபாண்டி ராஜா திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவர் இடத்தில் புதிய மாவட்டப்பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வீரபாண்டி ராஜா மாநிலத் தலைமைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்பிலிருந்த செல்வகணபதி சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக்கப்பட்டுள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சேலத்தில் திமுக பெரிய அளவிலான வெற்றியைப் பெற முடியவில்லை. வீரபாண்டி ராஜா, முன்னாள் அமைச்சரும் கட்சியில் வலுவான செல்வாக்குடன் திகழ்ந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ஆவார். அவர் மாவட்டத்தில் வலுவான மாவட்டச் செயலாளராக இருந்த நிலையில் அவர் மாற்றப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள தகவல்:

“சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மாவட்ட கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டக் கட்சி அமைப்பின் நிர்வாகிகள் நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அவருக்குப் பதிலாக மாவட்ட கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற, கட்சித் தேர்தல் பணிக்குழு செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த டி.எம். செல்வகணபதி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் காந்திசெல்வன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கே.ஆர்.என். ராஜேஷ்குமார் நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார் .

கட்சி சட்டதிட்டம் 31-ன் படி வீரபாண்டி ராஜா கட்சி தலைமைக் கழகத்தால் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமிக்கப்படுகிறார் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் அவர் இணைந்து பணியாற்றுவார்”.

இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x