

விருதுநகர் மெட்டுக்குண்டு ஊராட்சி வார்டு உறுப்பினர் மாரிமுத்து தன்னை பதவியேற்கவிடாமல் அதிமுகவினர் மிரட்டுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார்.
மெட்டுகுண்டு அருகே உள்ள பொட்டல்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (42). திமுக ஊராட்சிப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மெட்டுகுண்டு ஊராட்சி 9-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால் ஊராட்சித் தலைவர் மற்றும் அதிமுக கிளைச் செயலாளர் சுப்புராஜ் என்பவரும் ஊராட்சி செயலர் கணேசனும் தன்னை வார்டு உறுப்பினராக பொறுப்பு ஏற்க விடாமல் தடுப்பதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் மாரிமுத்து குடும்பத்துடன் வந்து இன்று புகார் அளித்தார்.
இதுகுறித்து மாரிமுத்து கூறுகையில், "திமுக பிரதிநிதியான என்னை பொறுப்பேற்க விடாமல் ஊராட்சித் தலைவர் மற்றும் செயலர் தொடர்ந்து தடுத்து வருகின்றனர்.
பொறுப்பேற்க வேண்டும் என்றால் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சான்று பெற்று வருமாறு துரத்துகின்றனர். நான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைக் கொடுத்தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதுபற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டாலும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மெட்டுக்குண்டு ஊராட்சியில் சென்று பதவி ஏற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பிவிட்டனர்.
ஆனால் மெட்டுகுண்டு ஊராட்சியில் ஒன்பதாவது வார்டு உறுப்பினராக பதவி ஏற்க விடாமல் தலைவர் உள்ளிட்டோர் தடுத்து வருகின்றனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.