

மத்திய பட்ஜெட்டில் விவசாயத்திற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் பெரும் பயன் அளிக்கும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (பிப்.3) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல்வேறு முக்கிய அம்சங்களில் விவசாயத் தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு பெரும் பயன் அளிக்கும் வகையில் முக்கியத் திட்டங்கள் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.
குறிப்பாக விவசாயிகளின் நலனுக்காக 16 அம்சத் திட்டங்களை அமல்படுத்த உள்ளதாகக் கூறியிருப்பதால் விவசாயத்தொழிலையும், விவசாயம் சார்ந்த தொழிலையும் வளர்ச்சி பெறச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக விவசாயத் துறைக்கு ரூ.2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும், 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய மின்சக்தியில் இயங்கும் இயந்திரங்களை அமைக்க உதவிகள் செய்ய இருப்பதும், வேளாண் சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்க இருப்பதும், கிராம அளவில் விவசாயப் பொருட்கள் சேமிப்பகம் அமைக்க இருப்பதும், பாசனத்திற்காக தண்ணீர் தட்டுப்பாடுள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க இருப்பதும், உரங்கள் பயன்பாட்டில் சமநிலையை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க இருப்பதும், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளுக்கு புவிசார் குறியீடும், வரைபடம் வாயிலாக கண்டறியும் வசதியும் ஏற்படுத்த இருப்பதும், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதும் விவசாயிகள் நலன் சார்ந்தது.
மேலும், விவசாயக் கடன் வழங்க ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ததன் மூலம் பல லட்சம் விவசாயிகளுக்கு சுலபமாக வங்கிகளில் குறைந்த வட்டியில் விவசாயக் கடன் கிடைக்கும். அதே போல கிரெடிட் கார்டு மூலம் ஒவ்வொரு விவசாயியும் ரூ.1 லட்சம் கடன் பெறலாம் என்ற அறிவிப்பு கிராமப்புற விவசாயிகள் மிக எளிதாக கடன் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். பெண் விவசாயிகளும் எளிதாக விவசாயக் கடன் பெறுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.
மேலும், பால், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட விவசாய உற்பத்திப் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச்செல்ல கிசான் ரயில் சேவையும், உள்நாட்டிற்குள்ளேயும், வெளிநாட்டிற்கும் கொண்டு செல்ல விமான சேவையும் தொடங்க இருப்பது விவசாயிகளுக்குப் பெரும் பயன் தரும். வங்கி வைப்பு நிதிக்கான காப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதும், குறைந்த விலை வீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதும் விவசாயிகளுக்கும் பயன் தரும்.
பால் வளத்துறைக்கும், கால்நடை வளர்ப்புத் துறைக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது பால் உற்பத்தி அளவை இரு மடங்கு வளர்ச்சியுடன் 108 மில்லியன் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதும், கால்நடைகளின் எண்ணிக்கையை 30 முதல் 70 சதவீதம் வரையில் உயர்த்தத் திட்டமிட்டிருப்பதும் பால் வியாபாரம் செய்யும் விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பேருதவியாக இருக்கும்.
மீன் உணவுகள் சார்ந்த உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்தி இலக்கு நிர்ணயித்திருப்பதால் மீன் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளும் பயன் அடைவார்கள்.
எனவே 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் உள்ள பல்வேறு அம்சங்களில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலுக்காக அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவங்கள் விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கும் பெரும் பயன் அளிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசு விவசாயத்துறைக்கு அளித்த திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தி, ஒதுக்கிய நிதிகளை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயத்தையும், விவசாயிகளையும், விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களையும் முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.