

திருப்பூர் அருகே அலகுமலையில் நேற்று கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடந்தது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் 3-வது ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக அமைச்சர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘தமிழகம் முழுவதும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தியுள்ளோம். 146 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்துள்ளது. மத்திய அரசின் விலங்குகள் நலவாரியத்தின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு, விதிகள் அனைத்தையும் கடைப்பிடித்து ஜல்லிக்கட்டை நடத்தி வருகிறோம்' என்றார்.
இதைத்தொடர்ந்து, வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்துவிடப்பட்டன. பல காளைகள், வீரர்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில், களத்தில் சுழன்று விளையாடின.
மிடுக்கான கட்டப்பா
வீரர்கள் தங்களை நெருங்காத வகையில், சில காளைகள் எதிரில் வருவோரை முட்டித் தள்ளி எல்லைக் கோட்டை வேகமாக கடந்து சென்றன. அந்த வகையில் புதுக்கோட்டையிலிருந்து அழைத்துவரப்பட்ட ‘கட்டப்பா’ காளை, களத்தில் 8 நிமிடங்களுக்கு மேல் நின்று வீரர்கள் யாரும் தன்னை தொடாத வகையில் கம்பீரமாக களத்தில் நின்று மிடுக்காக விளையாடியது. இது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
இதேபோல் திருச்சி கொட்டப்பட்டு, மதுரை கருவலூர், புதுக்கோட்டை வனத்துறை மாடு, சேலம் தம்மம்பட்டி மாடுகள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் விளையாடின.
அமைச்சர், எம்.எல்.ஏ.-க்களின் காளை
மாடுபிடி வீரர்கள் மத்தியில் மூர்க்கத்தனத்துடன் விளையாடிய காளைகளுக்கு, பார்வையாளர்களின் கைதட்டலுடன் பலத்த வரவேற்பு கிடைத்தது. பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன், முக்கிய பிரமுகர்களின் காளைகள், திருப்பூரை சேர்ந்த பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் நிறுவனங்கள் சார்பில் பங்கேற்ற காளைகளும் வெற்றி பெற்றிருந்தன.
காளைகளை அடக்கி வெற்றி பெற்றவர்கள், வெற்றி பெற்ற காளைகளின் விவரங்கள் விழா மேடையிலிருந்து அறிவிக்கப்பட்டு, உடனுக்குடன் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.
போட்டியைக் காண ஜல்லிக்கட்டு களத்தின் இருபுறங்களிலும் பார்வையாளர் மாடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பெண்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாது கண்டுகளித்தனர்.
பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் பணியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் மேற்பார்வையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார், ஊர்க்காவல் படையினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
90 பேர் காயம்
காயமடையும் வீரர்களுக்கு, பொது சுகாதாரத் துறை சார்பில் முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, ஜல்லிக்கட்டில் காயமடைந்த 90 பேருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.
இதில், 16 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.