

நாட்டுக்கோழி முட்டை என்று கூறி கோவையில் விற்பனை செய்யப்பட்ட சாயமேற்றப்பட்ட முட்டைகளை உணவுப்பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
கோவை மாநகரில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் காய்கறி மார்க்கெட்களில் பண்ணைக்கோழி முட்டைகளை சாயமேற்றி, நாட்டுக்கோழி முட்டை என்று விற்பனை நடைபெறுவதாக உணவுப் பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் கு.தமிழ்ச்செல்வன் தலைமையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டன.
அந்த குழுவினர் உக்கடம் மீன் மார்க்கெட், லாரி பேட்டை மீன் மார்க்கெட், சிங்காநல்லூர் உழவர் சந்தை, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை, வடவள்ளி உழவர்சந்தை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட், அண்ணாமார்க்கெட் பகுதிகளில் நேற்று காலை 6மணி முதல் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சேலம், நாமக்கல் பகுதிகளில் இருந்து வரும் பண்ணைக் கோழி முட்டைகளில், சிறிய முட்டைகளை சாயமேற்றி நாட்டுக்கோழி முட்டை என்றுகூறி விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக டாக்டர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது: முட்டை விற்போர் சேலத்தில் இருந்து ரயில் மூலம் குழுவாக கோவை வருகின்றனர். ஒவ்வொருவரும் தலா ஓர் ஈய பாத்திரத்தில் சுமார் 500 முட்டைகள் வீதம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் மார்க்கெட்களில் விற்பனை செய்கின்றனர். ஆய்வின்போது 10 பேரிடம் இருந்து 3,900 சாயமேற்றப்பட்ட முட்டைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இனிமேல் இதுபோன்ற முட்டைகளை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சாயமேற்றப்பட்ட முட்டையாக இருந்தால் அதன் நிறத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். இவ்வாறு நிறமேற்ற காபி தூள், டீ தூளை பயன்படுத்துகின்றனர்.
இதுபோன்று சாயமேற்றப்பட்ட முட்டைகள், கலப்பட டீத்தூள், அதிக நிறமேற்றப்பட்ட சில்லி சிக்கன், காலி பிளவர் சில்லி, காளான் சில்லி போன்ற உணவு பொருட்கள், தரம்குறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை உணவு பொருட்கள் விற்பனை அல்லது சேமித்துவைத்திருத்தல் குறித்து உணவுப் பாதுகாப்பு துறையின் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவரின் பெயர் விவரம் ரகசியம் காக்கப்படும். புகார் பெறப்பட்ட 48 மணிநேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.