

பொருளாதாரம் குறித்த கல்வியோ, அது குறித்த அறிவோ இல்லாதவர் ப.சிதம்பரம் என்று பாஜகதேசிய செயலர் ஹெச்.ராஜா கூறினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாஜகவினர் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவுசெய்ததாகப் புகார் தெரிவித்துபாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த பாஜக நிர்வாகிகளின் செல்போன்களை உடைத்து,கொலை மிரட்டல் விடுத்தவர்களை விட்டுவிட்டு, பாஜகவினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ததாகப் புகார் தெரிவித்தும், போலீஸாரைக் கண்டித்தும் பாஜகவினர் கோஷமெழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறியதாவது: ப.சிதம்பரம் பொருளாதாரம் படித்தவர் அல்ல, அவர் தாக்கல் செய்த அனைத்து பட்ஜெட்களும் மக்களுக்குப் பயனற்றதாகவே இருந்தன. எனவே, பொருளாதாரம் குறித்த கல்வியோ, அறிவோ இல்லாத ப.சிதம்பரம், தற்போதைய பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராகதிமுக நடத்தும் கையெழுத்து இயக்கம் மூலம், யாரெல்லாம் தேசவிரோதிகள் என்பது தெரிந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.