Published : 03 Feb 2020 09:15 AM
Last Updated : 03 Feb 2020 09:15 AM

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு தீவிரம்: ஆம்புலன்ஸ்களுடன் தயார் நிலையில் மருத்துவ குழு

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்கு வரும் பக்தர்களின் நலனுக்காக அதிநவீன ஆம்புலன்ஸ்களுடன் அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ன. முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக பேட்டரி கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா பிப்.5-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான 2, 3-ம்கால யாகசாலை பூஜைகள் நேற்றுநடைபெற்றன. குடமுழுக்கு விழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், போக்குவரத்து வழித்தடங்கள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பக்தர்களுக்காக பல்வேறு மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் குமுதா லிங்கராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் செய்து வருகின்றனர். இந்த மருத்துவ வசதிகள் தயார் நிலையில் இருப்பதை ஆட்சியர் நேற்று பார்வையிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2 நாட்களில் மட்டும் கோயிலுக்கு 50 ஆயிரம் பக்தர்கள் வந்து சென்றுள்ளனர். குடமுழுக்கு விழா நடைபெறும் நாளில் மட்டும் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கோயிலுக்கு வரும் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக பேட்டரி கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், மருத்துவ வசதிக்காக 5 பைக் ஆம்புலன்ஸ்கள் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல 16 ஆம்புலன்ஸ்கள், 7 அதிநவீன ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன.

6 மருத்துவ மையங்கள், 26நடமாடும் மருத்துவக் குழுவினர்என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலின் எதிர்புறம் மருத்துவக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராசாமிராசுதார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 40 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டுகளில் மருந்துகள், மருத்துவர்கள் தயார்நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x